வைரமுத்துவைக் கைவிட்ட திமுக!

வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சை சமயத்தில், அதாவது கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி அப்போதைய திமுகவின் செயல் தலைவரான ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சில பகுதிகளை மட்டும் உங்கள் நினைவுக்காகத் தருகிறேன். மற்றவற்றை தொடர்ந்து சொல்கிறேன்.


’’தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாரம்பரியமிக்க தனியார் நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கவிஞர் வைரமுத்து எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாக விளக்கம் அளித்து “யாருடைய மனதினையும் புண்படுத்துவது நோக்கமல்ல. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

அக்கட்டுரையைப் பிரசுரித்த நாளிதழிலும் “ஆசிரியர் வருத்தம்” என்றெல்லாம் போடாமல், இதழின் பெயரையே போட்டு, வருந்துகிறது” என்று ஒட்டுமொத்தமாக நாளிதழே வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்து மதம் உள்ளிட்ட எந்தவொரு மதத்தினரின் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் விமர்சிப்பதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை.

“வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கு வலு சேர்க்கும் விதத்தில் அனைத்து மதத்தினரும் சாதி வேறுபாடின்றி, “சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை” போன்ற நெறிகளை உயர்த்திப் பிடித்து நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும் என்பதுதான் திமுகவின் விருப்பம்.

ஆனால் “வெறுப்பு அரசியலுக்கு எப்போது விதை தூவலாம்; வெறுப்புக் கனலை விசிறிவிட எப்போது வாய்ப்பு கிடைக்கும்" என்று காத்துக் கொண்டிருக்கும் ஒரு சிலர் தாங்கள்தான் ஒட்டுமொத்த இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் கவிஞர் வைரமுத்து மீதும், அக்கட்டுரையை வெளியிட்ட நாளிதழ் மீதும் அராஜகமான கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். ஒரு சிலர் தங்களின் சுயநலனுக்காகவும், விளம்பர வெளிச்சத்திற்காகவும் அமைதி தவழும் தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்திலும், தரம் தாழ்ந்த வகையிலும் தமிழ் மண்ணின் கவிஞர் வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்றுக் கருத்து மட்டும் இருக்க முடியுமே தவிர, அநாகரிகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை என்று திமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.” - இதுதான் அன்று ஸ்டாலின் சொன்னது.

இப்போது சின்மயி விவகாரத்தில் சிக்கி வதைபட்டு வருகிறார் வைரமுத்து. மீ டூ இயக்கத்தில் தன்னை அழைத்தார் வைரமுத்து என பாடகி சின்மயி கொளுத்திப் போட அது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பல தரப்பிலிருந்தும் வைரமுத்துவுக்கு எதிராகக் கண்டனக் குரல்களும் வந்தபடியேதான் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தனக்கு ஆதரவாக திமுகவிலிருந்து, அதுவும் தலைவர் ஸ்டாலினிடமிருந்து அறிக்கை வரும் என எதிர்பார்த்தார் வைரமுத்து. ஆனால், கனிமொழி மீ டூ இயக்கத்தை ஆதரித்து ட்வீட் செய்தார். இதனால் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி, ஸ்டாலினிடம் சொல்லச் சொல்லியிருக்கிறார். ‘தலைவர் இருந்தால் என்னை இப்படி விட்டிருப்பாரா?’ என்று கேட்டும் வைரமுத்து வருத்தப்பட்டாராம்.

இந்த விஷயம் ஸ்டாலின் கவனத்துக்குப் போயிருக்கிறது. ‘ஆண்டாள் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக அறிக்கை விட்டோம்னா அது பொதுவான விஷயம். இது அவரோட பர்சனல் விஷயம். இதுல போய் நாம எதுக்கு மூக்கை நுழைக்கணும்? சின்மயி விவகாரத்தில் அவரோட பேரு கெட்டுப் போயிருக்கு. இந்த நேரத்துல அவருக்கு நாம எதுக்கு சப்போர்ட் பண்ணணும்? இதுநாள் வரைக்கும் கட்சிப் பேரை வெச்சுக்கிட்டு அவருதான் பலனடைஞ்சிட்டு இருந்திருக்காரு. அவரால கட்சிக்கு எந்த லாபமும் இல்லை. அதனால இதில் நாம அமைதியாக இருப்பதுதான் நல்லது...’ என்று சொல்லிவிட்டாராம்.

திமுக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘வைரமுத்துவுக்கான முக்கியத்துவம் திமுகவில் இப்போது இல்லை. கவிஞர் ஒருவரது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அப்போது வைரமுத்துவை அழைப்பதாக இருந்தால், ’நான் வரவே இல்லை. நீங்க அவரை வெச்சே விழாவை நடத்திக்கோங்க!’ என கலைஞர் குடும்பத்திலிருந்தே அப்போது ஒரு குரல் வந்தது. அதனால் அந்த விழாவுக்கு வைரமுத்துவை அழைக்கவில்லை. இதேபோல் இன்னொரு புத்தக வெளியீட்டு விழாவுக்கும் வைரமுத்துவை அழைக்க ஸ்டாலின் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசி நேரத்தில் ஸ்டாலினிடம் பேசி சமாதானப்படுத்த அவர்களுக்குப் போதும்போதும் என்றாகிவிட்டது. வைரமுத்துவைக் கட்சிக்கான அடையாளமாக இனி எங்கேயும் காட்டிக் கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.” என்று சொல்கிறார்கள்.

இந்த விவரங்களை எல்லாம் இன்னும் வைரமுத்துவிடம் சொல்லவில்லையாம். ஸ்டாலினிடமிருந்து அறிக்கை வரும் என்ற எதிர்பார்ப்பில்தான் இருக்கிறார் கவிஞர்.”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.