மன்னாரில்“வனரோபா” நிகழ்ச்சித் திட்டமும், சுற்றாடல் மாநாடும் நிகழ்வு!

எதிர்கால தலைமுறைக்காக சுற்றாடலை பாதுகாக்கின்ற பொறுப்பை நிறைவேற்றுவதற்காக தான் சுற்றாடல் அமைச்சை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முக்கியமான பதவிகளை விடுத்து சுற்றாடல் துறை அமைச்சை தான் தெரிவு செய்தது மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களினதும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காகும் என்றும் சுட்டிக்காட்டினார். 
இன்று  முற்பகல் மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி  இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
சுற்றாடல் அழிவு இன்று மனிதனின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியிருப்பதாகவும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களினதும் எதிர்கால இருப்புக்காக சுற்றாடலை பாதுகாப்பது அவசியமாகும்.
ஒரு மாவட்டத்தில் இடம்பெறும் சுற்றாடல் அழிவு குறித்து அம்மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க அதிகாரிகளும் பொறுப்பு கூற வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் அழுத்தங்கள் இருக்குமானால் அது பற்றி தனக்கு அறியத்தருமாறும் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் மரக்கன்றுகளை வழங்கிவைக்கும் நிகழ்வையும் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்ஹ, மஹிந்த அமரவீர, றிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்கள் ஸ்ரீயானி விஜேவிக்ரம, வீரகுமார திசாநாயக்க, பிரதியமைச்சர்கள் அங்கஜன் ராமநாதன், காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, மன்னார் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதேநேரம் 2018 தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று  முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் மன்னார் மடு வீதி தம்பனைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.