பிரேமலதா பொருளாளர் ஆன கதை!

அலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. சில படங்கள் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன. அதை டவுன்லோடு செய்து பார்த்தோம். நேற்று தேமுதிக தலைமைக் கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் படங்கள் அவை. சில நிமிட இடைவெளியில் செய்தியும் வந்து விழுந்தது.

”கட்சியில் ஆல் இன் ஆலாக வலம் வந்தாலும் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு முக்கிய பதவி எதுவும் தேமுதிகவில் இல்லை. இப்போது அவரைக் கட்சியின் பொருளாளராக நியமித்திருக்கிறார் விஜயகாந்த். கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே பொருளாளராக இருந்தவர் ஏ.ஆர். இளங்கோவன்.
விஜயகாந்த் ரசிகர் மன்றக் காலத்திலிருந்து அவரோடு இருப்பவர். சாதாரண பைக் மெக்கானிக்காக இருந்த இளங்கோவனுக்குக் கட்சியில் பொறுப்பு, எம்.எல்.ஏ. சீட் என அடுத்தடுத்து கொடுத்து அழகு பார்த்தார் விஜயகாந்த். ஆனால், போட்டியிட்ட தேர்தல் எதிலும் இளங்கோவன் ஜெயிக்கவில்லை. ஒரு கட்டத்தில் இளங்கோவனைத் தாண்டி விஜயகாந்தைச் சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சிக்காரர்கள் மத்தியில் இருந்தது. அதெல்லாம் விஜயகாந்த் கவனத்துக்குப் போனாலும், அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
கடந்த ஜூலை 4ஆம் தேதி தேமுதிகவின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடந்தது. விஜயகாந்துக்கு ஆல் இன் ஆலாக வலம் வரும் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் அந்தக் கூட்டத்துக்கு வரவில்லை. அப்போதே விஜயகாந்துக்கும் இளங்கோவனுக்கும் இடையில் மன வருத்தம் தொடங்கிவிட்டதாம். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் படுத்ததிலிருந்தே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரையும் அவரை நெருங்கவிடவே இல்லையாம். பிரேமலதா சில முறை கணக்கு கேட்கிறேன் என்ற பெயரில், ’கட்சிக்கு நிதி இவ்வளவுதான் வந்துச்சா... எல்லாம் கணக்குல காட்டியிருக்கீங்களா? நம்புற மாதிரியே இல்லையே..’ எனச் சிரித்தபடியே சொல்லியிருக்கிறார். அப்போது கோபத்தில் போன இளங்கோவன் வரவே இல்லையாம்.
அதன் பிறகு இளங்கோவனே, ‘என்னைப் பொருளாளர் பதவியிலிருந்து விடுவித்து விடுங்க...’ என்று கேட்டாராம். அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் கூட இறங்காமல், அவரைப் பொருளாளர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, அந்தப் பொறுப்பை பிரேமலதாவே எடுத்துக் கொண்டார். ‘கட்சிக்கு வரும் மொத்த வருமானத்தையும் கவனிக்கும் பொறுப்பில் இருக்கிறவங்ககிட்ட கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா? அவரு என்ன அரிச்சந்திரனா?’ என்றும் இளங்கோவன் பற்றி கிண்டலாகச் சொல்லியிருக்கிறார் பிரேமலதா. இதெல்லாமே இளங்கோவன் கவனத்துக்கும் போக, ரொம்பவே நொந்துவிட்டாராம். ‘இவங்களுக்காக என் வாழ்க்கையை மொத்தமாக தொலைச்சிட்டு நிற்கிறேன். எல்லோரும் போகும் போது நானும் போயிருக்கணும். நாய் மாதிரி கட்சியே கதின்னு கிடந்தேன்ல... எனக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்...’ என்று புலம்பித் தீர்த்துவிட்டாராம் இளங்கோவன்.
இந்தச் சூழ்நிலையில்தான் கட்சியின் புதிய பொருளாளராகப் பதவியேற்றிருக்கிறார் பிரேமலதா. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், கட்சியைச் சீரமைக்க வேண்டும் என்றுதான் நேரடியாகக் களத்தில் குதித்திருக்கிறாராம் பிரேமலதா. கட்சிக்குப் பொருளாளராகத் தன்னை நியமிக்க வேண்டும் எனப் பிரேமலதா கேட்டபோது, விஜயகாந்த் முதலில் சம்மதிக்கவில்லையாம். ‘புருஷன் தலைவர்; பொண்டாட்டி பொருளாளர்னு கிண்டல் பண்ணுவாங்க...’ என்று சொன்னாராம். சுதீஷும், பிரேமலதாவும் சேர்ந்து அடம் பிடித்துத்தான், அவருக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக, கட்சியில் பூத் கமிட்டி அமைப்பதில் தொடங்கி, இனி கட்சியின் அத்தனை செயல்பாட்டையும் பிரேமலதா கவனிப்பாராம். ’கீழ்மட்ட நிர்வாகிகள் தொடங்கி, மாவட்டச் செயலாளர்கள் வரை செயல்படாதவங்க பலர் இருக்காங்க. அந்தப் பட்டியலைத் தயார் பண்ணிட்டிருக்கேன். எல்லோரையும் மாற்றி அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்..’ எனவும் சொல்லியிருக்கிறார் பிரேமலதா.
தேமுதிக வட்டாரத்தில் பேசியபோது, ‘சுதீஷும், அண்ணியும் வெச்சதுதான் முன்பிருந்தே கட்சியில் நடக்கும். இப்போ கேப்டனைப் பொறுத்தவரை எதுவும் கேள்வி கேட்க முடியாத நிலையில் இருக்காரு. கட்சியின் செயல்பாடுகள் எதையும் அவரு கவனிக்கிற நிலையில் இல்லை. அதனால இனி, அண்ணி சொல்றது மட்டும்தான் கட்சியில் நடக்கும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அண்ணியை முன்னெடுத்துத்தான் கட்சி செயல்பட ஆரம்பிக்கும். எப்படித் தலைவர் கலைஞர் இருந்தபோது, செயல் தலைவர் என ஸ்டாலின் செயல்பட்டாரோ இனி அறிவிக்கப்படாத செயல் தலைவராக அண்ணிதான் இருப்பாங்க...’ என்று சொல்கிறார்கள்.” 

No comments

Powered by Blogger.