'விஸ்வரூப' நாயகனின் 'புது ரூபம்'!

நடிகர் கமல் ஹாசன் தான் நடிக்கவுள்ள இந்தியன்-2 படம் தொடர்பான பணிகளைக் கையிலெடுத்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா உள்ளிட்டோர் இணைந்து நடித்து வெளியான படம் இந்தியன். பெருவாரியான ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது பார்ட் 2 படங்கள் எடுக்கும் பழக்கம் ட்ரெண்ட்டில் உள்ள நிலையில் ‘இந்தியன்’ படமும் தன் இரண்டாம் பாகத்துக்குத் தயாராகியுள்ளது.
ஒரு பக்கம் எந்திரனின் இரண்டாம் பாகம் எனக் கூறப்படும் ‘2.O’ படத்தில் பிஸியாக இருக்கிறார் ஷங்கர் . மறுபக்கம் கமலோ, ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகம், ‘பிக் பாஸ்’ இரண்டாம் பாகம் (!) ஆகியவற்றை முடித்து ‘தேவர் மகன்’ இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவையும் வெளியிட்டு, கிட்டத்தட்ட ‘தசாவதாரம்’ பட பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தின் இரண்டாம் பாகமெனக் கூறப்படும் ‘சபாஷ் நாயுடு’ பட பணிகளிலும் பிஸியாக இருக்கிறார்.
இப்படியான இந்த இருவரின் ‘இரண்டாம் பாக’ செயல்பாடுகள் நடந்துவரும் சூழலுக்கு மத்தியில்தான் இந்த ‘இந்தியன்-2’வும் உருவாகவுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்குகிறது. 2020ஆம் ஆண்டு இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.
வழக்கமாக தனது உடலை கட்டுக்குள் வைத்திருக்கும் கமல், முன்னதாகக் காலில் தனக்கு ஏற்பட்ட காயத்தாலும் அதனால் ஏற்பட்ட ஓய்வாலும் சற்றே எடை போட்டிருந்தார். அவர் நடித்த ‘விஸ்வரூபம்’ பட முதல் பாகக் கமலுக்கும் தற்போது வெளியான இரண்டாம் பாகக் கமலுக்கும் உடலளவில் நிறைய வித்தியாசங்களைக் காணமுடிந்தது.
இதைத் தானும் உணர்ந்ததாலோ என்னவோ, இந்தியன் -2 படத்திற்காகத் தனது உடலை மெருகேற்றும் பணியில் தற்போது ஈடுபட்டுவருகிறார் கமல். இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் உடற்பயிற்சியாளர் கமலுக்கு உடல் பயிற்சியை அளிக்கிறார்.
இந்தியன் முதல் பாகத்தில் லஞ்சம் வாங்குவதற்கு எதிராக ‘விரல் சுழற்றும்’ சேனாபதியாக நடித்திருந்தார் கமல். அன்றைய தேதியில் அப்படத்தின் கதை கவனம்பெற்றது. ஆனால் ஷங்கரின் தொடர்ச்சியான லஞ்ச எதிர்ப்பு படங்களால் பல ரசிகர்களிடையே ஒருவித அலுப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. காரணம் ஷங்கரின் லஞ்ச எதிர்ப்புப் படங்கள் அல்ல; லஞ்சத்தை மட்டுமே பெரிய குற்றமாகக் கட்டமைத்துவரும் ஷங்கரின் தொடர் செயல்பாடுகள்.
லஞ்சம் வாங்குவது கண்டிக்கப்படவேண்டிய விஷயம்தான். அதேநேரம் அதைத் தாண்டியும் பல முக்கியமான பிரச்சினைகள் சமூகத்தில் பீடித்துள்ளன. ஷங்கர் போன்ற பிரமாண்ட இயக்குநர்கள் அவற்றையும் சுட்டிக் காட்டுகிற விதத்தில் தங்களின் படங்களை எடுக்க முன்வரவேண்டும் எனவும் பலர் தற்போது எதிர்பார்க்கின்றனர்.
கிட்டத்தட்ட ஷங்கருக்கு இருக்கும் அதே நெருக்கடிதான் தற்போது கமலுக்கும். காரணம், இந்தியன் முதல் பாகம் வந்தபோது நடிகராக மட்டுமே இருந்தார் கமல். தற்போது அரசியல்வாதியாகவும் அவர் உருவெடுத்துள்ளதால் கமலிடமிருந்து இன்னும் நிறையவே எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள். இந்த எதிர்பார்ப்பு விஷயங்களெல்லாம் கமல் மற்றும் ஷங்கரின் கவனத்திற்குச் செல்லாமலும் இருந்திருக்காது. எனவே இந்தப் படம் முதல் பாகத்தைப்போல லஞ்ச எதிர்ப்போடு மட்டுமே நிற்குமா அல்லது மற்ற தளத்திலும் பயணிக்குமா எனும் எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

No comments

Powered by Blogger.