தஞ்சை: சிலைகள் ஆய்வு!

தஞ்சைப் பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் சதய விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அங்குள்ள ஐம்பொன் சிலைகளின் தொன்மை குறித்துச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி உள்ளிட்ட 61 சிலைகள், ஐம்பொன் சிலைகளாக இருந்ததாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களின் அடிப்படையில், தற்போது 41 சிலைகள் மட்டுமே தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளன. ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் களவு போயிருந்தது கண்டறியப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷன் என்னும் அறக்கட்டளை நடத்திவரும் அருங்காட்சியகத்தில் ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளைச் சட்டவிரோதமாக வைத்திருப்பதாக, தமிழக முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், தமிழகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர்.
50 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை, குஜராத்தில் இருந்து ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீட்டனர்; கடந்த மே 31ஆம் தேதியன்று தமிழகம் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தஞ்சை கோயிலில் உள்ள 41 சிலைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கும், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் புகார்' வந்தது. இதன் அடிப்படையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தொல்லியல் துறையினருடன் இணைந்து தஞ்சைப் பெரிய கோயிலில் இரண்டு கட்டங்களாக ஆய்வு நடத்தினர்.
இன்று (அக்டோபர் 20) சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம், தொல்லியல் துறை இணை இயக்குநர் நம்பிராஜன் ஆகியோர் தலைமையில், தஞ்சைப் பெரிய கோயிலில் மூன்றாம் கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிலைகளின் உயரம், அகலம், எடை உள்ளிட்ட தகவல்கள் குறித்துத் தொழில்நுட்ப ரீதியில் ஆய்வு நடைபெறுகிறது.
தஞ்சைப் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1033ஆம் ஆண்டு சதய விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிலைகள் குறித்த ஆய்வு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.