திலீப்பை நீக்கிய ‘அம்மா’!

மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பிலிருந்து நடிகர் திலீப் நேற்று (அக்டோபர் 19) நீக்கப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். திலீப்பை அம்மா அமைப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீத்து மோகன்தாஸ் உள்ளிட்டோர் இணைந்து‘வுமன்ஸ் கலெக்டிவ் சினிமா’(WCC) என்ற அமைப்பைத் தொடங்கினர். அம்மா அமைப்பிலிருந்தும் விலகினர்.
திலீப்பை சங்கத்தில் சேர்ப்பது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் WCC அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்று கருத்து கூறவில்லை. எனவே அவரை மீண்டும் சங்கத்தில் சேர்த்தனர். இந்நிலையில் அம்மா அமைப்பு பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக அல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் துணை போகிறது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக அம்மா அமைப்பு திலீப்பை நேற்று நீக்கியுள்ளது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் தலைவரான மோகன்லால், “நான் திலீப்பை தொடர்பு கொண்டு இந்த முடிவை எடுத்துக்கூறி சங்கத்தில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டேன். அதன்பின் எங்களுக்கு அவர் கையெழுத்திட்ட விலகல் கடிதத்தை அனுப்பிவைத்தார்” என்றார்.
இந்த விவகாரத்தில் மோகன்லால் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கப்படுவதால் அதற்குப் பதிலளித்த அவர், “WCC அமைப்பு ஏன் என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்குகிறது என்று தெரியவில்லை. அனைவருமே என்னுடன் பணியாற்றும் நடிகர்கள் தான். எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. ஆனால் இந்த இடறல்கள் என்னைப் பாதிக்கின்றன. இது எனக்கு அசௌகரியமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.