உணர்வுகள் தொடர்கதை: ‘ஃப்ரெஷ்’ கூட்டணி!

2017ஆம் ஆண்டு ‘எஃப்பிபி கலர்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா - தமிழ் நாடு’ பட்டத்தை வென்றவர் ஷெர்லின் செத். மாடலிங் துறையில் ஈடுபட்டுவரும் இவர் தற்போது தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மாடலிங் துறைகளில் இயங்குபவர்களுக்கு பெரும்பாலும் திரையுலகில் நுழைவதே அடுத்த இலக்காக இருக்கும். அந்தவகையில் தற்போது திரையுலகில் வலம் வரும் நடிகைகளில் கணிசமானோர் மாடலிங் மூலம் களம் கண்டவர்களே.
பாலு ஷர்மா இயக்கும் ‘உணர்வுகள் தொடர்கதை’ படத்தின் மூலம் ஷெர்லின் சேத் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்துவைக்கிறார். பாலு ஷர்மா தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புலு’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தில் ஷெர்லினுக்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் கவனம் பெற்ற ஹ்ரிஷிகேஷ் நடிக்கிறார்.
இதில் கதாநாயகியாக நடிக்க ஏற்கெனவே ஷெர்லி பபித்ரா என்ற மற்றொரு மாடல் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகப் படக்குழு மீண்டும் கதாநாயகிக்கான தேர்வு நடத்தி ஷெர்லினை தேர்ந்தெடுத்துள்ளது. ஷெர்லினுக்கு மொழிப்பிரச்சினை இருந்தாலும் நகர்ப்புறக் காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ஹ்ரிஷிகேஷுக்கு ஜோடியாக நடிக்கப் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவர் தேர்வாகியுள்ளார். தற்போது அவர் தமிழ் பயின்றுவருகிறார்.
இந்த படத்தில் மொத்தம் ஆறு இசையமைப்பாளர்கள் பணியாற்றுகின்றனர். விவேக் மெர்வின், நிவாஸ் பிரசன்னா, விஷால் சந்திரசேகர், வருண் ஆகியோர் இசையமைத்துவரும் நிலையில் மேலும் இரு இசையமைப்பாளர்கள் இணையவுள்ளனர்.

No comments

Powered by Blogger.