மணல் கொள்ளையால் மாணவர்கள் உயிரிழப்பு!

காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 6 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டதற்கு மணல் கொள்ளையே காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் கிராமத்தில் காவிரியாற்றில் குளிக்கச் சென்ற 6 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். கல்லூரி மாணவர்களான மணிகண்டன், வெங்கடேசன், பள்ளி மாணவர்களான கதிரவன், விஷ்ணு, சிவபாலன், ஸ்ரீநவீன், சஞ்சய் ஆகிய 7 பேர் ஆற்றில் குளிக்க சென்றபோது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ஆறு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதில் சஞ்சய் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
இந்த நிலையில் மாணவர்களின் உயிரிழப்புக்கு மணல் கொள்ளையே காரணம் என்று குற்றம்சாட்டிய ராமதாஸ் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து இன்று(அக்டோபர் 20) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 6 மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வை விபத்து என்று கூற முடியாது; மாறாகப் படுகொலை என்று தான் கூற வேண்டும். காவிரி ஆற்றில் இயல்பான நீரோட்டம் இருந்தால் இத்தகைய நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. மாறாக, கபிஸ்தலம் முனியாண்டவர் கோயில் படித்துறை அருகே அதிகாரப்பூர்வமற்ற வகையில் மணல் குவாரி அமைக்கப்பட்டு, சட்டவிரோத மணல் கொள்ளை நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பல இடங்களில் 10 அடி ஆழத்திற்கும் கூடுதலாக பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக ஏற்பட்ட நீர் சுழற்சியில் சிக்கியதால் தான் 6 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். இதற்குத் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
“காவிரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளைகளால் ஏற்பட்ட பல அடி ஆழ பள்ளங்களிலும், நீர் சுழற்சியிலும் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி முக்கொம்பு மேலணை இடிந்ததற்குக் காரணமும் மணல் கொள்ளை தான் என்று தெரிவித்துள்ள ராமதாஸ், “மணல் குவாரிகளால் தமிழகத்தில் ஆட்சியாளர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. மணல் குவாரிகள் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு ரூ.86 கோடி மட்டும் தான். ஆனால், ஆட்சியாளர்களுக்கும், மணல் கொள்ளையர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. அதன் காரணமாகத் தான் மக்கள் உயிரிழந்தாலும், கட்டமைப்புகள் சிதைந்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை என்று கூறி மணல் கொள்ளையை அரசு ஊக்குவிக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “தமிழக அரசு இனியாவது திருந்தி காவிரி உள்ளிட்ட ஆறுகளில் செயல்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும். அதுமட்டுமின்றி, கபிஸ்தலத்தில் காவிரியில் மூழ்கி இறந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்

No comments

Powered by Blogger.