முதல்வர் மீது அவதூறு : லியோனி மீது வழக்கு!

முதல்வர், துணை முதல்வரை அவதூறாக விமர்சித்ததாக கூறி திண்டுக்கல் லியோனி மீது சென்னை பாண்டிபஜார் காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பட்டிமன்ற நடுவரான திண்டுக்கல் லியோனி திமுகவின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராகவும் இருந்துவருகிறார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெறும் பல பொதுக் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, அரசின் மீது நகைச்சுவையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் சென்னை தி.நகர் சதாசிவம் சாலையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய லியோனி, தமிழக அரசையும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதுதொடர்பாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மணிமேகலை புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் முதல்வரை அவதூறாக விமர்சித்தது தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் லியோனி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது பாண்டிபஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Powered by Blogger.