ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு ரூ.1கோடி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்காக ரூ.1 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரியவந்துள்ளது.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த சையது தமீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு எவ்வளவு ரூபாய் செலவு செய்யப்பட்டது, அவர் எப்போது இறந்தார் என்பது உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார்.

இதில் ஜெயலலிதா எப்போது இறந்தார்? என்ற கேள்விக்கு 5/12/2016 அன்று இறந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

அவருடைய சிகிச்சைக்காக அரசு எவ்வளவு பணம் செலவு செய்தது? என்ற கேள்விக்கு, சிகிச்சைக்காக அரசு செலவு செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்குத் தமிழக அரசு எவ்வளவு செலவு செய்தது? என்ற கேள்விக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக ரூ.99,33,586 செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜெயலலிதா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில், அவருக்கு பென்சன் வழங்கப்படுகிறதா? அது யாருக்கு வழங்கப்படுகிறது என்பது தொடர்பான கேள்விக்குச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பென்சன் தொகை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் சட்டசபை செயலாளரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறித்து அவர் தான் பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி கேட்கப்பட்ட கேள்விக்கு தற்போது தகவல் கிடைத்துள்ளது.

No comments

Powered by Blogger.