#MeeToo நடிகர் சங்கம் அறிக்கை!

திரையுலகில் பெண்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகளை பெண்கள் மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். இது பரபரப்பை எற்படுத்தி வரும் நிலையில் தினமும் பல புகார்கள் வெளிவந்து அதிர்ச்சி அளித்து வருகிறது.

நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது புகார் கூறினார். இதைத் தொடர்ந்து கங்கணா ரனாவத், குயின் பட இயக்குநர் மீது பாலியல் புகார் சொல்ல, இது தொடர்பான புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து மேலும் சிலரும் அவர் மீது புகார் கூறியுள்ளனர். ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை, இயக்குநர் சுசீந்திரன் மீது குற்றஞ்சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர் லீனா மீது வழக்குத் தொடுத்துள்ளார். இவர்களை தொடர்ந்து தற்போது நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அர்ஜுன் மீது மீ டூ வில் புகார் கூறியுள்ளார். இதற்கு அர்ஜுன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.



இவ்வாறாக தொடர்ந்து மீ டூ ஹேஷ்டேக் மூலம் புகார்கள் தெரிவித்து வரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று (அக்டோபர் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படம் மற்றும் நாடகம் உருவாகின்ற படப்பிடிப்பு தளங்களில் பாலின வேறுபாடின்றி கலைஞர்களுக்கு மன் அழுத்தமோ, அச்சுறுத்தலோ இன்றி சுதந்திரமாக, சுயமரியாதையாக தங்கள் கலையை செயல்படுத்தும் சூழலைத் தக்க வைத்துக்கொள்ளவும் பாதுகாக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாய் கவனம் மேற்கொள்ளும். அவ்வகையில் அதை செயல்படுத்தி கண்காணிக்கக் குழு ஒன்றையும் அமைக்கும்” என்று தெரிவித்துள்ளது.

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில் மீ டூ விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடத்தப்பட்டது. இதில் பின்னணி பாடகி சின்மயி, இயக்குநர்கள் லட்சுமி ராமகிருஷ்ணன், லீனா மணிமேகலை, நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி ஆகியோர் பங்கெடுத்தனர். இதில் கலந்துக் கொண்ட ஊடகவியலாளர்கள் ‘இப்பிரச்சினைக்கு நடிகர் சங்கம் மற்றும் திரைத்துறை சார்ந்த சங்கங்களிடம் புகார் தொடுத்துள்ளீர்களா? அவர்களின் நிலைப்பாடு என்ன?’ போன்ற கேள்விகளை முன் வைத்தனர். இதற்கு சின்மயி, “திரைத்துறையில் இப்போதுதான் விஷால் இது பற்றி மூன்று பேர் கொண்ட குழு அமைக்க போவதாக அறிவித்திருக்கிறார். அது எந்த மாதிரி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.