சிபிஐ சிறப்பு இயக்குநர் மீது லஞ்ச வழக்கு!

சிபிஐ சிறப்பு இயக்குநர் ரகேஷ் அஸ்தானா மீது ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ‘ரா’ அமைப்பின் உயர் அதிகாரியான சமந்த் குமார் கோயலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதல் நீண்டகாலமாக நீடித்து வருகிறது. ராகேஷ் அஸ்தானாவை சிறப்பு இயக்குநராக நியமிக்கக் கூடாது என எழுத்துப்பூர்வமாகவே அலோக் வர்மா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
ஆனால் பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ராவின் ஆதரவுடன் அஸ்தானா சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் , முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதான வழக்குகளை விசாரித்து வருபவர் ராகேஷ் அஸ்தானா.
லாலு பிரசாத் மீதான வழக்கில் அலோக் வர்மா தலையிடுவதாக ராகேஷ் அஸ்தானா பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொய்ன் குரோசியிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக அஸ்தானா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
மொய்ன் குரோசிக்கும் அஸ்தானாவுக்கும் இடையே தரகராக செயல்பட்டதாக ‘ரா’ அமைப்பின் உயர் அதிகாரியான சமந்த் குமார் கோயல் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மொய்ன் குரோசி கைது செய்யப்பட்டார்.
தற்போது அஸ்தானா, சமந்த் குமார் கோயல் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது லஞ்சம் பெற்றதாக அக்டோபர் 15ஆம் தேதி தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அக்டோபர் 16ஆம் தேதி மனோஜை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சிபிஐ சிறப்பு இயக்குநர் மீதே சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளது அந்த அமைப்பில் உள்ள மோதல்களைப் பகிரங்கப்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.