அன்றும் இன்றும் எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்கள் !

மா.ச. மதிவாணன்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. இதையடுத்து எம்.எல்.ஏ.க்களை அதிமுக கடத்திவிடக் கூடாது என்பதற்காக அவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதில் தினகரன் மும்முரமாக இருந்து வருகிறார். இதனால் தமிழக அரசியலில் இன்னொரு கூவத்தூர் ‘கூத்து’ அரங்கேற இருக்கிறது.


இந்திய அரசியலைப் பொறுத்தவரையில் 1982-ல் ஹரியானாவில்தான் இத்தகைய ரிசார்ட் அரசியல் தொடங்கியது. இதுவரையிலான ரிசார்ட் அரசியல் குறித்த சுவாரசிய தொகுப்பை பார்க்கலாம்.

ஹரியானா

1982ஆம் ஆண்டு 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 36 இடங்களில் வென்றது. தேவிலாலின் லோக் தளம் கட்சி 31 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 6 இடங்களையும் கைப்பற்றின. இதனால் தனிப்பெரும்பான்மை கட்சி என்கிற அடிப்படையில் அப்போதைய ஆளுநர் ஜிடி தபேசிவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தேவிலால். 1982 மே 24ஆம் தேதியன்று பெரும்பான்மையை நிரூபிக்க தேவிலாலுக்கு அவகாசம் கொடுத்திருந்தார் ஆளுநர் தபேசி.

ஆனால் திடீரென காங்கிரஸ் கட்சியின் பஜன் லால் சுயேட்சைகளுடன் சேர்த்து தங்களுக்கு 52 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியை அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து 1 மாத காலத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டார். அப்போது லோக்தள், பாஜக மற்றும் சுயேட்சைகள் என 48 எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி ஹோட்டலில் தேவிலால் அடைக்கலமானார். ஆனால் தேவிலால் தமது ஆதரவு எம்.எல்.ஏ.க்களைத் தக்க வைக்க முடியவில்லை. அப்போது 5 ஆண்டுகாலம் காங்கிரஸ் முழுமையாக ஆட்சியை நடத்தியது. 1987ஆம் ஆண்டு தேர்தலில் 90 இடங்களில் வெறும் 5 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது என்பது வரலாறு.

கர்நாடகா

இந்தியாவிலேயே ரிசார்ட் அரசியலை அதிகம் எதிர்கொண்ட மாநிலம் கர்நாடகா என்பது மிகையல்ல. 1983இல் ராமகிருஷ்ண ஹெக்டேவில் தொடங்கி 2004, 2006, 2008, 2009, 2011, 2012 என ஆண்டுதோறும் எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாக்க ரிசார்ட்டுகளில் தங்க வைப்பது கர்நாடகாவில் வழக்கமான ஒன்றாக இருந்தது.

ஆந்திரா

1984இல் இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் அம்மாநில முதல்வர் என்.டி.ராமாராவ். அப்போது ஆளுநராக இருந்த தாகூர் ராம்லால் என். பாஸ்கர் ராவை முதல்வராக்கினார். பாஸ்கர் ராவோ தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு, டெல்லி என ரிசார்ட்டுகளில் தங்க வைத்து ஆட்சிக்காக போராடினார்.

ஆனால் பாஸ்கர் ராவ் அரசு கவிழ்ந்தது. அதன் பின்னர் 2 மாதங்களிலேயே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார் என்.டி. ராமாராவ்.

1995இல் ராமாராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய போது தமது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்திரபாபு நாயுடு ஹைதராபாத் ஹோட்டலில் தங்க வைத்து கட்சியைக் கைப்பற்றினார்.

குஜராத்

1995இல் பாஜக தலைமைக்கு எதிராக சங்கர்சிங் வகேலா கலகக் குரல் எழுப்பினார். அவருக்கு 47 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். அனைவரையும் மத்திய பிரதேச மாநில ஹோட்டலில் தங்க வைத்தார் வகேலா. மொத்தம் 7 நாட்கள் வகேலாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மத்திய பிரதேசத்தில் முகாமிட்டிருந்தனர். அப்போதுதான் கேசுபாய் படேல் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வகேலா ஆதரவாளர் சுரேஷ் மேத்தா முதல்வரானார்.

உத்தரப்பிரதேசம்

1998இல் கல்யாண்சிங் தலைமையிலான பாஜக ஆட்சியை ஆளுநர் ரொமேஷ் பண்டாரி டிஸ்மிஸ் செய்துவிட்டார். காங்கிரஸ் கட்சியின் ஜெகதாம்பிகா பால் உடனடியாக முதல்வராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கல்யாண்சிங் வழக்கு தொடர்ந்தார். ஒரே நாளில் ஜகதாம்பிகா பால் அரசை அலகாபாத் உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. கல்யாண்சிங் தமது எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பாக ரிசார்ட்டில் தங்க வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

பிகார்

2000ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாருக்கு அஞ்சி காங்கிரஸும் ராஷ்டிரிய ஜனதா தளமும் தங்களது எம்.எல்.ஏ.க்களை பாட்னா ஹோட்டலில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். அப்போது நிதிஷ்குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப் போனது.

2005ல் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவு தருவதற்காக ஜாம்ஷெட்பூர் ஹோட்டலில் லோக் ஜனசக்தி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர்.

மகாராஷ்டிரா

2002இல் சிவசேனா- பாஜகவுக்கு அஞ்சி முதல்வராக இருந்த காங்கிரஸின் விலாஸ்ராவ் தேஷ்முக், பெங்களூருவில் எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்தார். அத்துடன் எம்.எல்.ஏ.க்கள் தப்பி ஓடாமல் இருக்க பெங்களூருவுக்கு வந்து பார்வையிட்டு சென்று வந்தார் விலாஸ்ராவ் தேஷ்முக்.

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸின் ஹரீஷ் ராவத் அரசுக்கு எதிராக 2016இல் 9 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் ஹரீஷ் ராவத் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கு எதிரான வழக்கில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் 2017 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.

தமிழ்நாடு

1987இல் எம்.ஜி.ஆர். மறைந்த போது அதிமுக இரண்டாக பிளவுபட்டது. ஜெயலலிதா, ஜானகி தலைமையில் அதிமுக அணிகள் உதயமாகின. ஜானகி எம்.ஜிஆர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்தார். அப்போது ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு, விருதுநகர் என பல ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டனர். வாக்கெடுப்பு நாளில்தான் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தமிழகம் திரும்பினர்.

2017-ல் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவர் அணிக்கு எம்.எல்.ஏ.க்கள் தாவாமல் இருக்க சென்னையை அடுத்த கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். சசிகலா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் முகாமிட்டிருந்தனர். பின்னர் சசிகலாவுக்கு சிறை தண்டனையை உறுதி செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல் கடந்த பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இந்த எம்.எல்.ஏக்களை எடப்பாடி தரப்பு வளைக்காமல் இருக்க புதுச்சேரி, கூர்க் ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்பட்டனர்.

தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் மீண்டும் ரிசார்ட் அரசியல் தொடங்கிவிட்டது.

#தமிழ்நாடு  #உத்தரகாண்ட்  #மகாராஷ்டிரா   #பிகார்

No comments

Powered by Blogger.