ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் போராட்டம்!

ஒலுவில் மீனவர்களின் பிரச்சினைகளை நேரில் கண்டறியும் பொருட்டு ஜனாதிபதியின் நல்லிணக்க கூட்டிணைப்புச் செயலாளர் டாக்டர் கோல்டன் பெர்னாண்டோ இன்று ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.


அம்பாறை மாவட்ட கடற்தொழிலாளர்கள் சம்மேளனத்தினால் ஒலுவில் மீன்பிடி துறைமுக பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜருக்கமைய ஜனாதிபதியின் நல்லிணக்க கூட்டிணைப்புச் செயலாளர் இவ் விஜயத்தை மேற்கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் நேரில் பார்வையிட்டதுடன், மீனவர்களுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எம்.எஸ். நஸீர் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் கல்முனை கரையோர மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் சங்கம், கல்முனை மாவட்ட கடற்றொழில் அமைப்பு போன்றவற்றின் முக்கியஸ்தர்களும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது எம்.எஸ்.நஸீர், ஒலுவில் துறைமுக பிரச்சினையினால் 15 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் நிர்க்கத்திக்குள்ளாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேற்படி பிரச்சினைகளை கேட்டறிந்த ஜனாதிபதியின் நல்லிணக்க கூட்டிணைப்புச் செயலளர் கோல்டன் பெர்னாண்டோ, இது தொடர்பாக உண்மையான ஒரு அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்து இப் பிரச்சனைக்கு தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் வாக்குறுதியளித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.