வரதட்சணை கேட்ட மணமகனுக்கு மொட்டை!

உத்தரப் பிரதேசத்தில் வரதட்சணை கேட்டுத் திருமணத்தை நிறுத்திய மணமகனை, மொட்டையடித்து அவமானப்படுத்தியுள்ளனர் மணமகள் வீட்டார்.


உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவைச் சேர்ந்தவர் அப்துல் கலாம். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது; இன்று (அக்டோபர் 22) அத்திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பே, தனக்கு பைக் மற்றும் தங்க செயின் இரண்டும் வரதட்சணையாக வேண்டும் என மணமகள் வீட்டாரிடம் கேட்டுள்ளார் அப்துல்.

இதைக் கொடுக்க பெண் வீட்டார் மறுத்துள்ளனர். இதையடுத்து, மணமகன் திருமணத்தை நிறுத்தினார். நேற்று(அக்டோபர் 21) மணமகன் அப்துல் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது பாதித் தலை மொட்டையடிக்கப்பட்டது. சமூக வலைதளங்கள் மூலமாக, இந்த தகவல் வெளியே தெரிய வந்துள்ளது.

இது குறித்து மணமகளின் பாட்டி கூறுகையில், “திருமணம் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன் மாப்பிள்ளை வரதட்சணை கேட்டார். குறுகிய காலமே இருந்ததால், எங்களால் அதைச் செய்ய இயலாது என்று கூறினோம். அதனால், அவர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டனர். ஆனால், அவரின் தலையில் யார் மொட்டையடித்தது என்று தெரியவில்லை” என்று கூறினார். ஆனாலும், மணமகளின் வீட்டார் தான் இந்த காரியத்தைச் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர் மணமகன் அப்துலின் உறவினர்கள்.

“முன்னரே வாகனம் வேண்டும் என்று கேட்டிருந்தோம். நாங்கள் எதையும் திடீரென்று கேட்கவில்லை” என விளக்கம் அளித்துள்ளார் அப்துல்.

இதற்கு மாறாக, மணமகன் கேட்டதுபோல் அவருக்கு பைக் வாங்கி கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர் மணமகள் வீட்டார். “ஆனால், குறிப்பிட்ட பைக்தான் வேண்டுமென்று மணமகன் கட்டாயப்படுத்தினார். இதையடுத்து, அவர் விரும்பிய பைக்கும் வாங்கப்பட்டது” என்று கூறியுள்ளனர். திருமணத்தன்று தனக்கு தங்க செயின் போட வேண்டுமென்று கேட்டதாகவும், அப்போதுதான் மணமகள் வீட்டார் ஆத்திரமடைந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், மணமகன் வீட்டார் மது போதையில் வந்து மணமகள் வீட்டாரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.