வைரமுத்து-சின்மயி: ரஹ்மான் என்ன கூறினார்?

பாடலாசிரியர் வைரமுத்து மீது பின்னணிப் பாடகி சின்மயி, #MeeToo' ஹேஷ்டேக் மூலம் குற்றம் சுமத்தினார். அது தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வருகிறது. அவர்கள் இருவருடனும் தனது இசையமைப்பில் பல

சூப்பர் ஹிட் பாடல்களை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவர்களிருவருக்கும் இடையிலான சர்ச்சை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் என்ன நினைக்கிறார் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரைஹானா நியூஸ் செவன் செய்தி சேனலில் குவியம் என்ற நிகழ்ச்சியில் அளித்த நேர்காணலில், வைரமுத்து, சின்மயி இருவர் மீதும் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் பேசும் போது, “#MeeToo விவகாரம் ஒவ்வொன்றாக வெளியே வருவது நல்ல விஷயம். ஒரு பெண் தனது குடும்பத்தை காப்பாற்றவே வெளியில் வந்து வேலை செய்கிறார். அப்படிப்பட்ட பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

சின்மயி இத்தனை ஆண்டுக் காலம் இதுபற்றி பேசாதது ஏன்? அன்றைக்கே இதை தீர்த்திருக்க வேண்டும். அவர் மறுபடியும் பண்ணவிடாதபடி பண்ணி இருக்க வேண்டும். அது உண்மையா பொய்யா என்பதைத் தாண்டி அவருடைய குற்றச்சாட்டை நான் நம்புகிறேன். வேறு சில பாடகிகளும் வைரமுத்து குறித்து என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழுக்கு ஓர் அடையாளமாக அவர் இருந்தாலும் இந்த விஷயத்தை இவ்வளவு தூரம் வளரவிட்ட பின் வெளிப்படுத்துவது தவறு. முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். இங்கு மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் வைரமுத்து மீது மட்டும் குற்றஞ்சாட்டி ஒரு நபரை மட்டும் டார்கெட் செய்வதும் தவறுதான். இதேபோல் பலர் தவறுகள் செய்துள்ளனர். அவர்களை தைரியமாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்ட வேண்டும்.

சின்மயி, அவரது அம்மா இருவரும் எதற்கும் அஞ்சாதவர்கள், தைரியமானவர்கள். என்னிடம் ஒரு நிகழ்ச்சிக்காக சண்டை போட்டவர்கள். ரஹ்மானின் சகோதரியிடம் சண்டை போட்டவர்கள், வைரமுத்துவிடம் சண்டை போட முடியாதா? அதே போல் அவர்கள் அன்று வைரமுத்துக்கு பயந்து சொல்லாமல் விட்டதாகச் சொல்வதை நான் நம்பவே மாட்டேன்” என்றார்.

இந்த விவகாரம் பற்றி ரஹ்மான் என்ன கூறினார் என்றதற்கு, “சின்மயி இப்படி பலர் மீது குற்றம் சாட்டி வருகிறாரே, என்ன நடக்கிறது உண்மையா” என்று விசாரித்தார் என்றார். மேலும், சின்மயிக்கு இனி ரஹ்மான் பாட வாய்ப்பு தருவாரா என்ற கேள்விக்கு, “சர்ச்சைக்குரியவர்களுக்கு ரஹ்மான் எப்போதுமே வாய்ப்பு தர மாட்டார். இது என் கருத்து. அவர் என்ன முடிவெடுப்பார் என்பதை நான் கூற முடியாது” என்றார்.

மேலும், “யார் என்ன சொன்னாலும் முடியாது என்று சொல்லுங்கள். செருப்பு எடுத்து அடி, அந்த இடத்திலேயே அவமானப்படுத்து. அதைப் பார்த்து நூறு பேர் பயப்படுவார்கள். இந்த முதல் பெண் ஒத்துக் கொள்வதால் தானே மற்ற பெண்களிடமும் முயற்சி செய்கிறார்கள். யாருமே ஒத்துக்கொள்ளாதீர்கள்” என்றார்.

No comments

Powered by Blogger.