ஜெயக்குமார் சர்ச்சை: விசாரணை வேண்டும்!

"அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகார் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது இளம்பெண்ணை முன்னிறுத்தி ஒரு சர்ச்சை சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி கே.பாலகிருஷ்ணன் இன்று (அக்டோபர் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சரிடம் உதவி கேட்டுச் சென்ற பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததாகவும், அதன் தொடர்ச்சியாக அப்பெண் கருவுற்று குழந்தை பெற்றதாகவும், இதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இது அவதூறு என அமைச்சர் கூறினாலும் வெகுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை இது எழுப்புகிறது. நாடு முழுவதும் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு உள்ளவர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்கள் முன்வந்துள்ள நிலையில் இப்புகார் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“முறையான விசாரணையின் மூலமாகவே உண்மையை கண்டறிய முடியும். பாலியல் வல்லுறவு என்பது ஒரு கடுமையான கிரிமினல் குற்றம் என்கிற அடிப்படையில் உரிய முக்கியத்துவத்தோடு இப்பிரச்சனை அணுகப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் அவர் குடும்பத்திற்கும் முழுமையான பாதுகாப்பு அளிப்பதோடு, முறையான விசாரணையை தமிழக அரசு நடத்திடவும், விசாரணை முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.