நடிகை ராக்கி சாவந்த் மீது அவதூறு வழக்கு: !

தனது புகழ் மற்றும் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடிகை ராக்கி சாவந்த் பேசியதாக கூறி தனுஸ்ரீ தத்தா வழக்குத் தொடுத்துள்ளார்.


இந்தியா எங்கும் மீ டூ புயல் அடித்துக்கொண்டிருக்கிறது. தங்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர்கள் குறித்து பெண்கள் பலரும் வாய்திறக்க, அனேக பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தப் புயலைத் தொடங்கிவைத்தவர்களில் ஒருவர் தனுஸ்ரீ தத்தா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டினார். இது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வழக்கறிஞர் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பினார்.

இதனையடுத்து கடந்த வாரம் நானா படேகர் மீது தனுஸ்ரீ மும்பை காவலில் புகார் அளித்தார். இந்தப் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பல நடிகர் நடிகைகள் அவருக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அந்த படத்தில் இடம்பெற்ற அந்த பாடலில் தனுஸ்ரீக்கு பதில் நடித்த நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர் என கூறினார். மேலும் இது தொடர்பாக, “நானாஜி பற்றி தனுஸ்ரீ பொய் புகார் தெரிவித்துள்ளார். தனுஸ்ரீக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்துவிட்டு எழுந்தார் போலும். நான் பெண்களை மதிப்பவள். ஆனால் இந்த தனுஸ்ரீ 10 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலிருந்து வந்து கண்டதையும் வாந்தி எடுக்கிறார். அவரிடம் பணம் இல்லாததால் நானாஜி மீது பழி சுமத்துகிறார்” என்று கூறியிருந்தார் ராக்கி சாவந்த்.

இந்த நிலையில் இது தொடர்பாக ராக்கி சாவந்த் மீது ரூ.10 கோடி கேட்டு அவதூறு வழக்கை தனுஸ்ரீ தத்தா தொடர்ந்துள்ளார். இது குறித்து, தனுஸ்ரீயின் வழக்கறிஞர் நிதின் சதொபுதே ரிபப்ளிக் டிவிக்கு அளித்த பேட்டியில், “என் கட்சிக்காரரின் புகழ் மற்றும் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ராக்கி சாவந்த் மீது ஒரு குற்றவியல் மற்றும் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளோம். அவர் அதற்கு நஷ்ட ஈடாக திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால், அவர் இரண்டு ஆண்டுகளுக்குத் தண்டிக்கப்படுவார் அல்லது அபராதம் விதிக்கப்படுவார் அல்லது இரண்டும் கிடைக்கலாம்” என்று கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.