கூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலை !

கூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று (புதன்கிழமை) தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராகவே கடந்த தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால் என்னை ஒரு பொம்மையாக வைத்து அரசியலை நடத்துவதற்கு அதன் தலைவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

அதற்கு என்னால் இடமளிக்கமுடியவில்லை. எனக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கும் இடையே கடந்த 4 வருடங்களில் இடைவெளி பெரிதும் அதிகரித்துள்ளது.

இது நான் பெரிது நீ பெரிது என்ற மனப்பான்மை காரணமானதாகவோ அல்லது தலைமைத்துவப் போட்டி காரணமாகவோ ஏற்படவில்லை. மாறாக, எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் கோட்பாடு ரீதியாகவும் அணுகுமுறை ரீதியாகவும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இந்த வேறுபாடுகள் ஏற்பட்டன.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் போட்டியிடுவதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. நான் கைப்பொம்மையாக இருக்க சம்மதிக்காதவரை எனக்கு மீண்டும் இடமளிக்க அவர்களும் தயார் இல்லை.

பல நண்பர்கள் ஒற்றுமை அவசியம் என்பதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்தே போட்டியிட வேண்டும் என்றார்கள். கொள்கையில் திடமாக இல்லாது முன்பு ‘துரோகிகள்’ என்று வர்ணித்தவர்களின் வழித்தடத்திலேயே இப்பொழுது பயணம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எனக்கென்ன வேலை என்று கேட்டு அவர்கள் வாய்களை அடைத்துவிட்டேன்.

அதனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது சாத்தியமற்றது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.