ரஃபேல் விசாரணையை தடுக்க சிபிஐ இயக்குநர் மாற்றம்!

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வரும் சிபிஐயை தடுக்கவே அதன் இயக்குநர் அலோக் வர்மா திட்டமிட்டு கட்டாய விடுப்பில் செல்ல வைக்கப்பட்டுள்ளார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.


நாட்டின் தலைசிறந்த உளவுத்துறை நிறுவனமான சிபிஐயின் இயக்குநர்களுக்குள் தொடர்ந்து மோதல்கள் நடந்து வந்தன. மொய்ன் குரோஷி என்ற இறைச்சி ஏற்றுமதியாளரை ஒரு வழக்கிலிருந்து விடுவிக்க இடைத்தரகர்களின் மூலம் 5 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டு சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானா மீது வழக்கு தொடரப்பட்டது.

இதி்ல் உடந்தையாக இருந்த சிபிஐயின் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் தேவந்தர் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவே ராக்கேஷ் அஸ்தானாவின் வழக்கை விசாரித்து வந்தார். நேற்று நள்ளிரவில் பிரதமர் அலுவலகத்திலிருந்து பிறப்பித்த உத்தரவின்படி சிபிஐயின் இயக்குநர் வர்மா சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் ஆகியோருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று (அக்டோபர் 24) காலையில் உச்ச நீதிமன்றத்தில் தனது பணி நீக்கத்தை எதிர்த்து வர்மா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையானது வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரஃபேல் போர் விமான ஊழலின் விசாரணையை தடுக்கவே வர்மாவுக்கு கட்டாய விடுப்புக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ரஃபேல் ஊழலுக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களுக்கு இந்த நிலைமைதான் ஏற்படும் என்று பல்வேறு தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ அலோக் வர்மா, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான முக்கிய ஆதாரங்களை சேகரித்து வந்தார். தற்போது அவர் கட்டாய விடுப்பில் அனுப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் தகவல் தெளிவானது: ரஃபேல் விவகாரத்தை மோப்பம் பிடிக்கும் யாராக இருந்தாலும் நீக்கப்படுவார்கள். நாடும் அரசியலமைப்பும் ஆபத்தில் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

“நாட்டின் பல்வேறு அமைப்புகளையும் மோடி- அமித் ஷா அரசு சட்ட விரோதமாக ஐ.சி.யூ.வில் வைத்துள்ளது” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிசேக் சிங்வி கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கும் ரஃபேல் விவகாரத்திற்கும் சம்பந்தம் உண்டா? ரஃபேல் ஊழல் வழக்கின் விசாரணையை அலோக் வர்மா தொடங்க இருந்தது, பிரதமர் மோடிக்கு பிரச்னையாக மாறியிருந்ததோ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “சிபிஐ தற்போது பிபிஐ(பாஜக பீரோ ஆப் இன்வஸ்டிகேசன்) ஆக மாறியிருக்கிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஃபேல் விமான ஒப்பந்த ஊழல் நாட்டை உலுக்கி வரும் நிலையில் சி.பி.ஐ இயக்குநரை பிரதமர் மாற்றியிருப்பது உள்நோக்கம் கொண்டது”

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போன்ற தோற்றத்தை பிரதமர் உருவாக்கியுள்ளார்” என்று விமர்சித்துள்ளார்.

நாகேஸ்வர் ராவ் மீது குற்றச்சாட்டு

இதேபோல் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர் ராவ் மீதும் ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

“நாகேஸ்வர் ராவ் ஏற்கனவே சென்னையில் இணை இயக்குநராக இருந்தபோதே பெரும் சர்ச்சைக்குள்ளானவர். முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்திலேயே சென்று சந்தித்தவர். தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ டைரக்டராக இருந்த அலோக் வர்மா, நாகேஸ்வர் ராவ் மீதே வழக்குத் தொடர விரும்பினார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. மிகவும் சென்சிட்டிவான வழக்குகளை விசாரித்து வரும் சி.பி.ஐ. அமைப்பிற்கு அப்பழுக்கற்ற, நேர்மையான தலைமைக்குணம் படைத்த ஒரு இயக்குநர் இருக்க வேண்டிய இந்த நேரத்தில் இப்படியொரு மிகவும் ஜூனியர் அதிகாரியை நியமித்து, சி.பி.ஐ. அமைப்பை தங்களின் ‘கூண்டுக்கிளி’யாக்கியுள்ளது பா.ஜ.க. அரசு” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, “ சிபிஐ என்பது தனித்துவமான அமைப்பு, அதன் நம்பகத்தன்மையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. தலைமை பொறுப்பில் இருக்கும் இரண்டு அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இருக்கும்போது, அவர்களை தலைமையாக கொண்டு சிபிஐ செயல்பட்டால், அது எப்படி சரியாக இருக்கும். மேலும் தற்போதைய முடிவு அரசின் முடிவல்ல. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு” என்று கூறியுள்ளார்.

சிபிஐ இயக்குநரை திடீரென்று பதவியிலிருந்து நீக்க முடியாது. மிகவும் அத்தியாவசியமான நெருக்கடியான சூழல் இருந்தால் மட்டுமே நீக்க முடியும் என 1997இல் வினித் நாரயண் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த தீர்ப்பில் சிபிஐயின் இயக்குநர் 2 ஆண்டுகள் பதவி வகிக்க வேண்டும் என்று வரையறை செய்திருந்தது. ஆனால் இந்த வழக்கில் கட்டாய விடுப்பு அளித்திருப்பது ஏறக்குறைய பதவி நீக்கத்திற்கு சமம் என்பதால்தான் வர்மா உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.