பரோல் கேட்கும் இளவரசி!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் உறவினர் இளவரசி, 15 நாட்கள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை 15 நாட்களுக்கு ஒருமுறை தினகரன், விவேக் ஜெயராமன் உள்ளிட்ட உறவினர்கள் சிறையில் சந்தித்துப் பேசிவருகின்றனர்.
இதற்கிடையே சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது அவரை கவனித்துக் கொள்வதற்காக சசிகலா 5 நாட்கள் பரோலில் வெளிவந்தார். அதன்பின்னர் நடராஜன் மறைவையடுத்து 15 நாள் பரோலில் வெளிவந்த சசிகலா, 5 நாட்களுக்கு முன்னரே சிறைக்குத் திரும்பினார். ஆனால் சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசி பரோல் கேட்டதில்லை.
இந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளில் முதல்முறையாக தற்போது 15 நாட்கள் பரோல் கேட்டு இளவரசி சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பம் அளித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை இளவரசியின் வழக்கறிஞர்கள் சிறையின் தலைமைக் கண்காணிப்பாளரிடம் நேற்று அளித்துள்ளனர். தனது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை நேரில் பார்க்க வேண்டி அவர் பரோல் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. பரோல் மனுவை சிறைத் துறை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இன்னும் சில நாட்களில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், இளவரசி பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.