‘பரியேறும் பெருமாள்’: வாழ்த்து சொன்ன ரஜினி

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் தமிழ் ரசிகர்களைத் தாண்டி திரைப்பிரபலங்கள் பலரைக் கவர்ந்ததோடு இன்றும் பேசுபொருளாக இருந்துவருகிறது.

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
படம் வெளியான போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘செக்கச்சிவந்த வானம்’ வெளியானதால், ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கு குறைந்தளவு திரையரங்குகளே கிடைத்தது. இருந்தாலும் இப்படத்திற்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்து வந்ததன் விளைவாக திரையரங்குகள் கூடுதலாக்கப்பட்டன.
தொடர்ச்சியாக மக்களை தாண்டி திரைபிரபலங்களும் இப்படத்தை வெகுவாக பாராட்டி மேலும் மக்களிடம் கொண்டுசென்றனர். அதில் விக்னேஷ் சிவன், சித்தார்த், விஜய் சேதுபதி போன்றவர்கள் முக்கியமானவர்கள். இதனையடுத்து கன்னட, மலையாள மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், தயாரிப்பாளர் பா.இரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜை அழைத்துப் பாராட்டியுள்ளார். “ஒரு நாவலைப் போல படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். பல இடங்களில் நான் சிலிர்த்துவிட்டேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு அதிர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு நீலம் புரொடெக்சன்ஸ் சார்பாக இயக்குநர் பா.இரஞ்சித், ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள் குறித்த ரஜினியின் சமூக அக்கறையும், கனிவு நிறைந்த அன்பும் ,உணர்ச்சி மிகுந்த பாராட்டும் பெரும் உற்சாகத்தை தருவதாக இரஞ்சித் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்றும் இப்படம் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் படம் பார்த்த இயக்குநர் சங்கர் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அதில், “பரியேறும் பெருமாள் சினிமாவில் ஒரு இலக்கியம் போல அமைந்துள்ளது. ஆழமாக பாதிக்கும்படி இருந்தது. யோசிக்க வைத்தது. படத்தில் இடம்பெற்றுள்ள அந்தக் கொலைகாரர் கதாபாத்திரம் பயங்கரமாக இருந்தது. ஜோ கதாபாத்திரம் தேவையான இடங்களில் மென்மையாக, மிகச் சிறப்பாக இருந்தது. இயக்குநர் மாரி செல்வராஜின் மிகச்சிறந்த படைப்பு” என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயனும், “இந்த அழகான திரைப்படம் எப்போதும் நமது மனதில் இடம்பிடிக்கும். அனைவருமே தங்களது அற்புதமான பங்களிப்பினை சிறப்பாக செய்துள்ளனர். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
படம் வெளியாகி இருபத்தைந்து நாட்கள் கடந்தும் இன்னும் பேசும் பொருளாக இருப்பதினால் தான் பாலிவுட் பிரலங்கள் வரை இப்படத்தை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.