முல்லைப் பெரியாறு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

“முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வுக்கு கேரள அரசுக்கு வழங்கியுள்ள அனுமதியை திரும்பப் பெற வேண்டும்” என்று பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் அனுமதி கேட்டு ஆகஸ்டு 23ஆம் தேதி கேரள அரசு விண்ணப்பம் அனுப்பியது. இதனை ஏற்ற மத்திய அரசு, முதற்கட்டமாக சுற்றுச்சூழல் ஆய்வுக்கு 7 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் இயக்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது, சுற்றுச் சூழல் ஆய்வுக்கு வழங்கியுள்ள அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (அக்டோபர் 24) எழுதியுள்ள கடிதத்தில், “தற்போதுள்ள முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து ஆய்வு செய்ய கேரள அரசுக்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இது தமிழக மக்களிடையே மிகப்பெரிய ஐயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரள அரசு மத்திய அரசிடம் அணை கட்ட அனுமதி கேட்டிருப்பதும், அதனை மத்திய அரசு ஊக்கப்படுத்துவதும் 2014ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மீறும் செயலாகும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர், “புதிய அணை கட்டும் விவகாரத்தில் இரு தரப்பின் ஒப்புதலும் இருக்க வேண்டும். கேரள அரசு ஒரு முடிவெடுத்து அதனை தமிழகத்தின் மீது திணிக்கக் கூடாது” என்ற நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“கேரள அரசு ஏற்கெனவே உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 2014ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த மத்திய அரசிடம் திருட்டுத்தனமாக அனுமதி பெற்றது. இதற்கு கேரள அரசு தமிழக அரசின் ஆலோசனையையோ, ஒப்புதலையோ பெறவில்லை. இதையடுத்து, 16.5.2015 அன்று, தேசிய வன பாதுகாப்பு வாரியத்தின் நிலைக்குழுவின் உறுப்பினர்-செயலாளருக்கு எதிராக தமிழ்நாடு அரசு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது” என்பதையும் அக்கடிதத்தில் நினைவுபடுத்தியுள்ளார்.
எனவே இதில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு வழங்கியுள்ள பரிந்துரையை உடனடியாக திரும்பப் பெற மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும் எதிர்காலத்தில் முல்லை பெரியாறு அணை கட்டுவதற்காக கேரள அரசு யோசனை தெரிவித்தாலும், அதனை ஏற்கக் கூடாது என்று சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.