பன்றிக் காய்ச்சலைத் தடுக்க என்ன செய்யலாம்?

ஹெச்1என்1 என்ற வைரஸினால் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. டாமி ப்ளூ எனும் மாத்திரையை உட்கொண்டால், இந்நோய் 5 நாட்களில் சரியாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும்,

இந்நோயின் அறிகுறிகளை முழுதாகக் கவனிக்காமல் சிகிச்சை பெறும்போது, பாதிப்பு அதிகமாகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பினால் 542 பேர் பலியாகியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய சுகாதாரத் துறை.

தமிழகத்தில் திருச்சி, மதுரை, தஞ்சாவூர் பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகமிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இதற்கான சிகிச்சையளிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது தமிழக அரசு. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று ஈரோட்டிலுள்ள மருத்துவமனையொன்றில் வாணியம்பாடியைச் சேர்ந்த ஒருவர் பன்றிக்காய்ச்சலுக்குப் பலியானதாகத் தகவல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக, பன்றிக்காய்ச்சலுக்குப் பலியானவர்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி வருகிறது. இதனைத் தவிர்க்க, பன்றிக்காய்ச்சல் குறித்த அடிப்படைப் புரிதல் அவசியம்.

சாதாரண காய்ச்சலுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வது எளிதல்ல. சாதாரண காய்ச்சலைப் போன்றே, அனைத்து அறிகுறிகளும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பின்போதும் வெளிப்படும். உடல் சோர்வு, சளி என்றிருக்கும். பன்றிக் காய்ச்சல் கிருமி எளிதாகத் தொற்றும் இயல்பைக் கொண்டது. இந்நோய் தாக்கியவர்கள் இருமும்போதோ, தும்மும் போதோ, நோயாளிகளின் வாய் அல்லது மூக்கில் இருந்து வெளியேறும் கிருமிகள் அருகிலிருப்பவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவர் கையிலுள்ள கிருமிகள், மற்றவர்களுக்குப் பரவும் அபாயமும் உண்டு.

அறிகுறிகள்

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு மூக்கில் நீர் ஒழுகுதல், கழுத்தில் நெறி கட்டுதல், வாந்தி, பேதி போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சளி மற்றும் உடல் சோர்வினால் ஏற்படும் பாதிப்புகள் உடனடியாகத் தெரியவரும். பதினைந்து நாட்களுக்கும் மேலாக காய்ச்சலில் அவதிப்பட்டது போன்ற உணர்வைச் சில மணி நேரங்களில் உணரக்கூடும். தசை வலி ஏற்படும். அவ்வப்போது உடல் சூடு அதிகமாகி, பின்னர் குறையும்.

சோதனை அவசியம்

பன்றிக்காய்ச்சல் குறித்த உள்ளுணர்வுடன், மருந்தகம் சென்று மருந்துகள் வாங்க முயற்சிக்கக் கூடாது. மருத்துவமனைக்குச் சென்று முழுப்பரிசோதனை செய்த பின்னரே பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்படும். மாநில சுகாதாரத் துறை, இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தாலோ, பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ, காய்ச்சலுக்கான மருத்துவப் பரிசோதனைகளைக் கட்டாயம் மேற்கொண்டாக வேண்டும்.

சிகிச்சைகள்

பன்றிக் காய்ச்சல் தாக்கிய 48 மணி நேரத்தில், டாமி ப்ளூ மற்றும் ரிலின்ஸா ஆகிய மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது. இந்த மருந்தை, ஒருவர் 5 முதல் 7 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். டாமி ப்ளூ மாத்திரைகளை, ஒரு வயதுக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம். ரிலின்ஸா மாத்திரையை 7 வயதுக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொடுக்கலாம். இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதென்பது, கட்டாயம் மருத்துவரின் பரிந்துரை அடிப்படையிலேயே இருக்க வேண்டும்

தடுப்பு நடவடிக்கைகள்

இருமல் மற்றும் தும்மல் வரும்போது, காகிதத்தைக் கொண்டு வாயையும் மூக்கையையும் மூட வேண்டும். உடனடியாக, அக்காகிதத்தை அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். ரிமோட், கதவுப் பிடிகள் போன்ற பொருட்களை, அவ்வப்போது கிருமிநாசினி் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்குக் காய்ச்சல் அல்லது சளி இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பணியில் இருப்பவர்களும், தங்களுக்கு நோய் அறிகுறி இருப்பதாகத் தெரிந்தால் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. அடிக்கடி சுத்தமான நீரைப் பருகுவதோடு, உடலில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம். அதிக கூட்டமுள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், முகக் கவசம் அணிவது நலம் பயக்கும். வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தால், அங்கிருக்கும் நோய் பாதிப்பு குறித்து விசாரித்து அறிந்துகொள்வது நல்லது.

உணவு முறை

கர்ப்பிணிப் பெண்களும், மருத்துவமனையில் பணிபுரிபவர்களும் அதிக சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். வைட்டமின் பி12 நிறைந்த பசலைக் கீரை, உருளைக் கிழங்கு, பீன்ஸ், தானியங்கள், மாமிசம், பால், மீன் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இதனால், அதிக நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற வாய்ப்புள்ளது.

இவை எல்லாவற்றையும் விட, சாதாரண காய்ச்சல் அறிகுறி தோன்றினாலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களுக்குச் சென்று சோதனை செய்துகொள்வதன் மூலமாகத் தேவையற்ற பயத்தையும் பதற்றத்தையும் தவிர்க்கலாம். கூடவே, நோய் பாதிப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வையும் பெறலாம்! 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.