வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் கண்டன போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த கண்டன போராட்டம் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னால், வவுனியா மாவட்ட வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  ‘உழைப்பு கொடுப்பதோ கோடி ரூபாய் ஊதியமாய் கேட்பதோ ஆயிரம் ரூபாய்’, ‘அரசே ஏன் பாராமுகம் 2015 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று’, ‘பஞ்சப்படி கேட்கவில்லை உழைப்பிற்கான ஊதியத்தை தான் கேட்கின்றோம்’ போன்ற பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் பொருளாதாரத்தின் பெரும்பங்கை ஈட்டித்தரும் மலையகத் தொழிலாளர்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

மேலும் இலங்கையின் விலைவாசி ஏற்றம், உலகமயமாக்கலின் தாக்கம், பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றுக்கு முகம்கொடுத்துள்ள மலையகத் தொழிலாளர்கள் தமக்கு நாளாந்தச் சம்பளமாக 1000 ரூபாயை கோரி போராடி வருகின்றனர்.

ஆகையால் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே நாமும் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.மயுஸ்ரீரன், எம்.பி.நடராஜா, நகரசபை தவிசாளர் இ.கௌதமன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Vavuniya  ##Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #உழைப்பு   # ஆயிரம் ரூபாய் #தவிசாளர்   #இ.கௌதமன்,  #வவுனியா
Powered by Blogger.