மேல்முறையீடு செய்ய முடிவு!

தினகரனுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், ‘தகுதி நீக்க வழக்கில் 18 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளோம்’ என்று அறிவித்துள்ளார்.


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன், தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார். தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த தினகரன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து 18பேருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா அல்லது இடைத் தேர்தலை சந்திப்பதா என்பது குறித்து மதுரையிலுள்ள தனியார் விடுதியில் 18 பேருடன் தினகரன் இன்று (அக்டோபர் 26) ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை நீடித்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், “சபாநாயகர் செய்தது தவறு என்பதை நிரூபிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளோம்” என்று அறிவித்தார்.

“சபாநாயகர் ஒவ்வொரு முறையும் பழிவாங்கும் நோக்கோடு நடவடிக்கை எடுத்து வருகிறார். 18பேரும் தினகரனுக்கு ஆதரவாக இருந்த ஒரே காரணத்துக்காக எங்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்கை மாற்றிப் போட்ட பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11பேர் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. இதனை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். சபாநாயகர் தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியுள்ளார். இதன் காரணமாகத்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 18பேரும் ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம். பயத்தின் காரணமாக அல்ல ” என்றும் விளக்கமளித்த தங்க தமிழ்ச்செல்வனிடன், 18பேரும் மீண்டும் போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறதே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “மேல்முறையீடு ஒரு பக்கம் இருந்தாலும் நாளையே இடைத் தேர்தல் வந்தால் அதனை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் தேர்தலில் நிற்பதற்கு யாரும் தடை போட முடியாது. தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்று தேர்தல் ஆணையர் தெளிவாகக் கூறியுள்ளார். 18பேரும் அமமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களாக வருவோம் ” என்று பதிலளித்தார்.

இடைத் தேர்தலையும் சந்திப்போம்

மேலும், எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாக வழக்கறிஞர் கூறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்புதான் வரும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு என நம்பிக்கை தெரிவித்த தங்க தமிழ்ச்செல்வன்,

“மேல்முறையீட்டுக்கு 30-90 நாட்கள் அவகாசம் உள்ளது. அதற்குள் மேல்முறையீடு செய்வோம். மேல்முறையீட்டு வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே இடைத் தேர்தல் வைத்தால் அதனை சந்திக்க தயாராகவே உள்ளோம்” என்றும் குறிப்பிட்டார்.

சபாநாயகர் கேவியட் மனு தாக்கல்

இந்த நிலையில் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக சபாநாயகர் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 26) கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் தாக்கல் செய்துள்ள மனுவில், “தகுதி நீக்கம் செல்லும் என்ற மூன்றாவது நீதிபதியின் உத்தரவை எதிர்த்து 18பேரும் மேல்முறையீடு செய்யலாம் என்பதால், இதுதொடர்பாக எங்களின் ஆலோசனை இல்லாமல் எதுவும் முடிவெடுக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
#india   #Tamilnadu #Tamilnews  #tamilarul.net   #Tamil

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.