பாலியல் புகார்: 48 கூகுள் ஊழியர்கள் நீக்கம்!

கூகுள் நிறுவனத்தில் பாலியல் புகார்களுக்கு ஆளான 13 மூத்த மேலாளர்கள் உட்பட 48 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக மீ டூ விவகாரம் உலகம் முழுதும் புயலைக் கிளப்பி வருகிறது. இதைத் தொடர்ந்து, பணியிடங்களில் பாலியல் புகார் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன தனியார் நிறுவனங்கள்.
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஆண்டி ரூபின், சக பெண் உதவியாளரிடம் தவறான உறவில் இருந்ததாகப் புகார் எழுந்தது. இவர், ஆண்ட்ராய்டின் தந்தை என்ற சிறப்புக்குரியவர். இந்தப் புகார் உறுதியானதால், இந்திய மதிப்பில் சுமார் 568 கோடி ரூபாய் பணப்பலன்களுடன் பணியில் இருந்து ஆண்டி ரூபின் நீக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இதற்கு, ஆண்டி ரூபின் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாலியல் புகார்களுக்கு ஆளான கூகுள் நிறுவன ஊழியர்கள் 48 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, நேற்று (அக்டோபர் 25) கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. “பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 13 மூத்த மேலாளர்கள் உள்பட 48 பேர் பாலியல் புகார்களால் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் யாருக்கும், வேலையிலிருந்து செல்லும்போது எந்த பணப்பலன்களும் வழங்கப்படவில்லை” என்று கூறியுள்ளார் சுந்தர் பிச்சை.
“ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் கூகுள் அதிகம் கவனம் செலுத்தும். சக பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

#World News  #Google  #Tamilnews  #Tamilarul.net #Tamil  #Workers

No comments

Powered by Blogger.