தமிழக சட்டப்பேரவையைக் கூட்டுக: காங்கிரஸ்!

பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க உடனடியாகச் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர். ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது. கூட்டத்திற்கு கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். வசந்தகுமார், விஜயதாரணி, பிரின்ஸ், காளிமுத்து, மலேசிய பாண்டியன் உட்பட 7 எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, “தமிழகத்தில், டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்றவற்றுக்குப் போதிய தடுப்பு மருந்துகள் தமிழகத்தில் இல்லை. மனித உயிர்களுடன் இந்த அரசு விளையாடுகிறது. தயவுசெய்து அவ்வாறு விளையாட வேண்டாம். மருத்துவர்கள் பற்றாக்குறை, மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாதது எனப் பல பிரச்சினைகள் உள்ளன. இவை குறித்து விவாதிப்பதற்காக சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்.
18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உறுப்பினர்களாக நீடிக்கத் தகுதி இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் காலியான 18 தொகுதிகள் உள்பட 20 சட்டமன்ற தொகுதிகளில் உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இந்தத் தொகுதிகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி காலியாக இருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்றது அல்ல.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதற்காகவே தேவையற்ற காரணங்களை கூறி தேர்தலைத் தள்ளிப்போடுகிறார்கள். இந்தத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்

No comments

Powered by Blogger.