சர்காரைத் தொடரும் கத்தி சர்ச்சை!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சர்கார் திரைப்படம் சட்டப் போராட்டத்தில் சிக்கியுள்ள நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான கத்தி திரைப்படமும் சிக்கலில் உள்ளது.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் சர்கார் படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதிய கதையைத் திருடி சர்கார் என்ற தலைப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படமாக்கியுள்ளார். இந்தக் கதையை ஏற்கெனவே நான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் முறைப்படி பதிவு செய்துள்ளேன். எனவே இந்தப் படத்தின் கரு மற்றும் கதை என்னுடையது என்பதால் படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வரும் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை படத்தை வெளியிடத் தடைவிதிக்க முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் கத்தி படத்தின் ரீமேக் உரிமையை எதிர்த்து கே.ரங்கதாஸ் என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அப்போது அவர், கத்தி கதை தன்னுடையது என்றும் முருகதாஸ் காப்புரிமையை மீறி தனக்கு எந்த கிரெட்டிடோ அல்லது பணமோ தராமல் படத்தை எடுத்துவிட்டதாகக் கூறியிருந்தார். மேலும், தெலுங்கில் படம் ரீமேக் செய்யப்பட்டதுபோல் வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யும் உரிமையை முருகதாஸ் விற்பதற்குள் அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இதையடுத்து கத்தி படத்தின் ரீமேக் உரிமையை விற்கத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு எதிர் மனு தாக்கல் செய்துள்ளதோடு தடையை நீக்கவும் கோரியுள்ளது. இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சர்கார் வழக்கு அக்டோபர் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வழக்குகளும் முருகதாஸுக்கு முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

#Tamilnews  #Tamil  #india   #Tamilnadu   #Tamilarul.net    #cinema News
Powered by Blogger.