வெகுவிரைவில் மாகாண சபை தேர்தலாம்!

புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகத்தை பலப்படுத்தும் நடவடிக்கையாக வெகுவிரைவில் மாகாண சபை தேர்தலை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


இன்று (29) முற்பகல் திஸ்ஸமஹாராம, சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்ற தேசிய ஏர்பூட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் தலைமைத்துவமும் வழிகாட்டலுமின்றி இன்று ஆறு மாகாண சபைகளின் உத்தியோகத்தர்கள் சிரமத்திற்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றனர். சுற்றுநிரூபங்கள் காரணமாக அதிகாரிகளின் சேவைகள் வரையறுக்கப்படுகின்றமையினால் சிறந்த மக்கள்நேய சேவைகளை வழங்குவதற்கு அரசியல் தலைமைத்துவம் அவசியமாகும் என்று குறிப்பிட்டார்.

இதனால் வெகுவிரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துதல் தொடர்பாக நாளையோ அல்லது நாளை மறுதினமோ தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வடக்காயினும் தெற்காயினும் நாட்டின் எப்பிரதேசத்திலும் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு கடந்த மூன்றரை வருட காலமாக பொறுப்பு வகித்தவர்களுக்கு இயலாது போயுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி;, வடக்கு மக்களுக்காக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டம் அமைச்சரவை கலந்துரையாடலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கை சுமையினை குறைத்து, நாட்டில் பொருளாதார சுபீட்சத்தை கட்டியெழுப்பி, சிறந்த ஒழுக்கப் பண்புடைய அரச நிர்வாகத்தை பலப்படுத்தும் அதேவேளை, தேசியத்திற்கு மதிப்பளித்து முன்னோக்கிச் செல்ல சகலரும் ஒன்றிணைய வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதன்பொருட்டு புதிய அரசாங்கத்துடன் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் நட்புடனும் இணைந்துகொள்ளுமாறு தாம் சகல அரசியல்வாதிகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும், சர்வமதத் தலைவர்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

புதிய தொழிநுட்பமும் நவீன அறிவும் எமக்கு தேவையாயினும் தேசியத்தை மதிப்பளிக்கும் எமது கலாசார மற்றும் உணவு முறைகளுக்கு பொருத்தமான விவசாய பொருளாதார செயற்திட்டத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டியது அவசியமாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான விதை நெல் மற்றும் பழக்கன்றுகளை பகிர்ந்தளிக்கும் திட்டங்கள் இதன்போது ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, ஷான் விஜயலால் டி சில்வா, அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பெருந்தொகையான பிரதேச விவசாயிகளும் பங்குபற்றினர்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Maithiri

No comments

Powered by Blogger.