சச்சினை பின்னுக்குத் தள்ளிய ரோஹித்

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மும்பை பிரோபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய தவான் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த மூன்று போட்டிகளில் சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் 16 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து ரோஹித் ஷர்மா, அம்பத்தி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 211 ரன்களை எடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா 21வது சதத்தை பூர்த்தி செய்து 167 ரன்களில் ஆட்டமிழந்தார். 150 ரன்களை ஏழவது முறை கடந்துள்ளார்.
தொடர்ந்து விளையாடி வந்த ராயுடுவும் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்து ரன் அவுட்டில் வெளியேறினார். நீண்ட நாட்களுக்கு பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 377 ரன்களை குவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கிமார் ரோஜ் இரண்டு விக்கெட்டுகளையும், கீமோ பால், ஆஸ்லி நர்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இப்போட்டியில் ஃபெபியன் ஆலனின் சிறப்பான ஃபீல்டிங்கால் பல பவுண்டரிகள் தடுக்கப்பட்டன.
இந்த போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், சச்சினை ரோஹித் முந்தினார். சச்சின் 195 சிக்ஸர்கள் அடித்திருந்தார். ரோஹித் தற்போது 196 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் மகேந்திர சிங் தோனி 218 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த பட்டியலில் பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். தோனி இதில் நான்காவது இடத்திலும், ரோஹித் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.

No comments

Powered by Blogger.