மாயோனில் இணைந்த தன்யா!

சிபிராஜ் நடிக்கும் மாயோன் திரைப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.


ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலின் ரகசியம் ஒன்றைக் கண்டறிய தொல்லியல் குழு ஒன்று மேற்கொள்ளும் பயணம் குறித்து உருவாக உள்ளது மாயோன் திரைப்படம். கிஷோர் இயக்கும் இந்த படத்தில் சிபிராஜ் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். ஆகஸ்ட் மாதமே படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியிருந்தது. ஆனால் கதாநாயகி யார் என்பது மட்டும் முடிவாகாமல் இருந்தது. இந்நிலையில் தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக இணைந்துள்ளார்.

சசிக்குமார் நடித்த பலே வெள்ளையத் தேவா படத்தின் மூலம் அறிமுகமானாலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கருப்பன் படத்தில் நடித்தது தன்யா ரவிச்சந்திரனுக்கு நல்ல அறிமுகத்தைப் பெற்றுத்தந்தது. கடந்த ஆண்டு வெளியான அந்த படத்தை தொடர்ந்து தன்யா நடிப்பில் வேறெந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் டபுள் மீனிங் புரொடக்‌ஷன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்து வருகிறார்.

திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி பதினைந்து ஆண்டுகள் ஆனபோதும் சிபிராஜ் குறைவான படங்களிலேயே நடித்துள்ளார். அதே சமயத்தில் குறிப்பிடும்படியான வெற்றிப்படங்களும் அவருக்கு அமையவில்லை. இந்நிலையில் தன்யா, சிபிராஜ் இணைந்துள்ள இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Powered by Blogger.