#MeeToo டி.இமான் கருத்து!

தவறு எதுவும் செய்யாதவர்கள் மீ டூவைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.இமான், மீ டூ குற்றச்சாட்டுகளில் யார் பக்கம் நியாயம் உள்ளதோ அவர்களுக்கு உரிய விடை கிடைக்கும் என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து பேசும் போது, “எந்தத் துறையில்தான் இல்லாமல் இருக்கிறது.


திரைத்துறை அதற்கு விதிவிலக்கு கிடையாது. ஒரு சில துறைகளில் நடக்கும் போது அது சம்மந்தப்பட்டவர்களோடு முடிந்துவிடுகிறது. திரைத்துறை என்று வரும் போது அது எல்லோருக்கும் தெரிகிறது. ஒரு பூதக்கண்ணாடி போட்டு, ஊடகம் மூலம் எல்லோரிடமும் சொல்கிறோம். அதனால் பூதாகரமாக பார்க்கப்படுகிறது.


ஒரு மனிதனாக நாம் சரியாக இருக்கும் போது எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது. அது சரியாக இல்லாத போது வருகிற குழப்பங்கள்தான் இதெல்லாம். என்னதான் மற்றவர்கள் மீது விரல் நீட்டி காட்டினாலும், மீதமிருக்கிற மூன்று விரல் நம்மை நோக்கிப் பாய்கிறது. எனவே நாம் உண்மையாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று தோன்றுகிறது.


தவறு செய்தவர்கள்தான் எல்லா விஷயத்திற்கும் அஞ்ச வேண்டும். தவறு செய்யாமல் உண்மையாக இருப்பவர்களுக்கு மீ டூ என எந்த விஷயம் வந்தாலும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தர்மம் எப்போதும் வெல்லும். யார் பக்கம் நியாயம் இருந்தாலும் அதற்குண்டான சரியான விடை கிடைக்கும் என நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.