தினகரனை தவிர அனைவரையும் ஏற்றுக்கொள்வோம்!

தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்துக் கொள்வோம் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.


சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை திரும்ப அழைப்பது குறித்தும், 20 தொகுதி இடைத் தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், “இடைத் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். இன்னும் ஓரிரு தினங்களில் தேர்தல் பணிகளைத் தொடங்குவோம். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர் தேர்வு குறித்து பேசிக்கொள்ளலாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகளைத் துவங்கிவிட்டோம். பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன” என்று தெரிவித்தார்.

வழிமாறிச் சென்றவர்களை ஓபிஎஸ்-ஈபிஎஸ் மீண்டும் அழைத்துள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, “ஊராட்சி, நகர பகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அதிமுகவில் இணைந்துவிட்டனர். கூடிய விரைவில் 90 சதவிகிதம் பேர் இணைவார்கள். எங்களுடைய அழைப்பு தினகரனைத் தவிர அனைவருக்கும் பொருந்தும். நாங்கள் தினகரனை அழைக்கவில்லை. திசைமாறிச் சென்ற தொண்டர்களை அழைத்துள்ளோம்” என்று பதிலளித்தார்.

மேலும், “3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பதிலைப் பொறுத்து நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும். அழைப்பு விடுத்தது காலம் கடந்தது என்று ரத்தினசபாபதி கூறியிருக்கிறார். விரைவில் அவர் மனம் திருந்தி வருவார் என்று எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்ட வைத்திலிங்கம், தினகரன் தரப்பினர் குழப்பத்தில் இருப்பதாகவும் விமர்சித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.