வங்கி எழுத்தர் தேர்வு: ஜேட்லிக்கு வைகோ கடிதம்!

வங்கிப் பணியாளர் தேர்வில் மீண்டும் பழைய நடைமுறையையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் எழுத்தர் பணிகளுக்கு அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கே இதுவரை வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அந்தந்த மாநில மொழிகளைப் படிக்கவும், எழுதவும், பேசவும் அந்தப் பணியாளர்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இதுவரை இருந்தது. இந்த நடைமுறையினால் அரசு வங்கிகளில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு எழுத்தர் பணி வாய்ப்புகள் கிடைத்து வந்தன. இந்த நிலையில் வங்கித் தேர்வு நடத்தும் இந்திய வங்கித் தேர்வு நிறுவனம் எழுத்தர் பணிகளுக்கு மாநில மொழி அறிவு கட்டாயம் என்று இருந்ததை முன்னுரிமை (Preferable) என்று மாற்றி ஆணை வெளியிட்டுள்ளது.
இதனை முன்னிறுத்தி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (அக்டோபர் 29) எழுதியுள்ள கடிதத்தில், “இதனால் தமிழகத்தில் கடந்த ஆண்டில் 19 பொதுத்துறை வங்கிகளுக்கு 1224 எழுத்தர் பணி இடங்களுக்கு நடந்த தேர்வில் தேர்வான வெளி மாநிலங்களைச் சார்ந்த 200 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் இதனைப் போலவே பிறமொழி பேசுபவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு அந்தந்த மாநிலத்தவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்த அநீதியைத் தடுத்து நிறுத்தி நடப்பு ஆண்டில் (2018) நடைபெற உள்ள வங்கி எழுத்தர் பணிகளுக்கான தேர்வுகளில் மாநில மொழிகளில் தேர்ச்சி பெற்றோரை மட்டுமே தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று முன்பு இருந்ததைப் போலவே விதிமுறையை மாற்றி அமைக்க வேண்டும்” என்றும் அருண் ஜேட்லிக்கு வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கடிதத்தின் நகல்கள் வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனத்தின் ஆட்சிமன்றக்குழுவின் உறுப்பினரும் இணைச் செயலாளருமான அமித் அகர்வால் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கணேஷ் சிங் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.