நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் பாஜக: சிதம்பரம்!

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயில் விவகாரத்தை வைத்து நாட்டை பிளவுபடுத்த பாஜக முயற்சிப்பதாக சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக மக்களின் கருத்தை அறியும் நோக்கில் இணையதளத்தை காங்கிரஸ் கட்சி இன்று (அக்டோபர் 29) அறிமுகம் செய்தது. மொத்தம் 16 மொழிகளில் கருத்தை தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவருமான சிதம்பரம், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைத்தால் என்னென்ன செய்ய வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என்பதை தெரிவிக்க அவர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் தங்கள் ஆலோசனைகளை அனுப்ப வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.



தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு காங்கிரஸ் காரிய கமிட்டிதான் அதனை முடிவு செய்யும் என தெரிவித்த சிதம்பரம், “நாங்கள் தேர்தல் அறிக்கையை வரைவு செய்து காரிய கமிட்டியிடம் வழங்குவோம். மக்கள் தங்கள் ஆலோசனையை ஜனவரி வரை வழங்கலாம்” என்று குறிப்பிட்டார்.


தொடர்ந்து பேசிய அவர்,” ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயில் விவகாரத்தை வைத்து நாட்டை பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் முன்பாக உள்ளது. உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்வரை அனைவரும் காத்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.



தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள ராஜீவ்கௌடா பேசுகையில், “20 பகுதிகளாக தேர்தல் அறிக்கையை வகைப்படுத்தப்படுத்தியுள்ளோம். பொருளாதாரம், தொழில் மற்றும் சிறு, குறு தொழில், விவசாயம் மற்றும் விவசாய தொழிலாளர், நகர்ப்புற பிரச்னைகள், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.