சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை!

முதல்வருக்கு எதிரான டெண்டர் முறைகேட்டுப் புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலை டெண்டர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்களுக்கு முறைகேடாக ஒதுக்கியதாகவும், இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பிலும், முதல்வர் தரப்பிலிருந்தும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. திமுக சார்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 29) விசாரணைக்கு வந்தது.
முதல்வர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “டெண்டர் விவகாரம் வெளிப்படைத் தன்மையாக எந்த முறைகேடுமின்றி நடைபெற்றிருக்கிறது. யாருக்கு எந்த சந்தேகம் என்றாலும் அதனை நிவர்த்தி செய்துகொடுப்பதற்கு டெண்டர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தெளிவாக இருக்கிறது” என்ற வாதத்தினை முன்வைத்தார். திமுக சார்பில், “இந்த விவகாரத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. இது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி, “டெண்டரில் முறைகேடு நடந்தது என்றால், அந்த டெண்டரை ரத்து செய்யக் கோரிதானே புகாரை அளித்திருக்க வேண்டும். ஏன் மாநில முதல்வர் மீது வழக்கு தொடர்ந்தீர்கள்” என எதிர்மனுதாரரான திமுக தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட தலைமை நீதிபதி, முதல்வர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடையும் விதித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இதனால் வழக்கு விசாரணை முடியும் வரை, முதல்வர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.