மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அமெரிக்காவிற்கு அனுப்ப அனுமதி!

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


குறித்த அனுமதியினை மன்னார் நீதவான் வழங்கியுள்ளதாக அகழ்வுப் பணிகளை முன்னெடுத்துவரும் குழுவின் தலைவரும் சட்ட வைத்திய அதிகாரியுமான சமிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது 98 வது நாளாக இன்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

தொடர்ச்சியாக மழை பெய்கின்ற போதும் மனித எழும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றினை அப்புறப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், “இதுவரை 216 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 209 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் குறித்த மனித எலும்புக்கூடுகள் காபன் பரிசோதனைக்காக அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு கூடத்துக்கு அனுப்புவதற்கான அனுமதியை மன்னார் நீதவான் வழங்கியுள்ளது.

விரைவில் அதி முக்கியமான எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்களை குறித்த ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Mannar  #USA  #Days98

No comments

Powered by Blogger.