மனம் எனும் குழந்தை.-ஹரிணி!



வாழ்வில் எப்படிப்பட்ட அனுபவங்களை சந்தித்தாலும் துவண்டு போகாமல் மனக்குதிரையை தட்டி இயல்பாக, இனிமையுடன் செயற்படச் செய்யுங்கள். நீங்கள் கடந்து வந்த கடினப் பாதைகளுக்காக உங்களுக்கு நீங்களே பாராட்டை தெரிவித்து உங்களை நீங்களே தட்டிக் கொடுங்கள்.
ஏனெனில் ஆற்றல் மட்டும் இல்லை என்றால் நீங்களும் இன்று இல்லை தானே. இன்று நீங்கள் இருப்பதன் காரணமே உங்கள் ஆற்றல் தான். நீங்கள் வாழ்வின் நெளிவுசுழிவு, கரடுமுரடுகளை கடந்து வந்தமை தான். உங்களுக்கான பாதையை வகுத்ததும் நீங்கள் தான்.

உங்கள் வாழ்வின் உங்களுக்கான இந்தக் கணமும், இந்த நாளும் மீண்டும் வரப்போவதில்லை. உங்கள் சோகங்களை இன்னொருவர் வாங்க போவதுமில்லை. அதை பத்திரப்படுத்தி பயன் என்ன? உள்ளத்தில் அடைத்து வைத்த சோகம், பகை என்பன மெல்லக் கொல்லும் விஷம்.

மனதில் நிறைத்து வைத்த கசக்கும் எண்ணங்களை வலுக்கட்டாயமாக விரட்ட முனையாதீர்கள் அது இன்னும் தீவிரம் அடையும். அதைத் தீர்க்க ஒரே வழி அதற்கு பலம் கொடுக்காமல் விடுவதுதான். நீங்கள் சக்தி வழங்காமல் அந்த அழுத்த மனநிலை எப்படி செயல்படுகிறது என உற்றுக் கவனியுங்கள் போதும். சில வினாடிகளில் பனிபோல் மறைந்து விடும். அப்போது தான் புதிய இனிய எண்ணங்களுக்கான இடம் கிடைக்கும்.

மனம் என்பது நீங்கள் மட்டுமே உருவாக்கியது. நீங்கள் குழந்தையாக இருக்கும் போதே நீங்கள் உருவாக்கிய குழந்தை தான் மனம். பிறந்த பின்னர் உணரும் சம்பவங்களுக்கு அமைய மனம் தோன்றி இன்று பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது. குழந்தைகள் பாம்பினைக் கண்டால் கூட அஞ்சாமல் தொட்டு விளையாடுவதற்குக் காரணம் அவர்கள் மனமும் குழந்தை என்பதனால் தான். பின்னர் அனுபவங்கள் மூலமே மனது பயம், கோபம், முன் எச்சரிக்கை, லோப தாபங்கள் என காலத்திற்கு காலம் நீங்கள் கொடுப்பதைத் தான் உள்வாங்கி வளர்கிறது . 

நாம் உருவாக்கிய ஒன்று.. எமக்கு சேவை செய்ய வேண்டிய ஒன்று. .. எமக்கு உதவிக்காக நாம் உருவாக்கிய ஒன்று தன் இஷ்டத்திற்கு ஆடுகிறது, ஆட்டுவிக்கிறது. பகை, பழி, சோகம் என கீழ்ப்போக்காக எமை நடத்துகிறது. அதி ஆற்றல் மிக்க மனதை இப்படி செயற்பட அனுமதிப்போமேயானால் வாழ்வின் எந்த நலனையும் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.
இந்த உலகம் அன்றும் இன்றும் தன் செயற்பாட்டில் மட்டுமே கவனமாக இருக்கும். பிறர் நாம் நினைப்பது போல் இருக்க வேண்டும் என நினைப்பதே பல வேதனைகளுக்கு ஆணிவேர். அவரவர் தத்தமது இயல்பில் வாழ வேண்டும். அன்பு என்ற பெயரில் மற்றவரை எமக்கேற்றாற்போல் மாற்றங்களை உண்டு பண்ண முயல்வது உச்சக்கட்ட சுயநலம்.
ஒவ்வொரு விடயங்களையும் அதன் போக்கிலேயே விட்டு விடுபவர்க்கு வாழ்க்கை இலகுவாக இருக்கிறது. எல்லா உயிர்களும் நிலை மாறாது வாழும் போது மனிதன் மட்டும் பல கடினத் தன்மையினை வாழ்வில் திணித்து துன்பப்படுகிறான். மனதளவில் இறுக்கம், அழுத்தம் என்பவற்றை கொடுத்து உடலையும் நோய்க்கு உரியதாக்குகிறான்.
உங்கள் வீட்டை சுத்தம் செய்வதைப் போல் உங்கள் மனதினையும் அன்றாடம் சுத்தம் செய்யுங்கள். மலர்ச்செடிகளால் வீடு நறுமணம் வீசுவதனைப் போல் நல்ல நினைவுகள், தூய சிந்தனைகள், நல்ல இலட்சியக் கனவுகள் போன்றவற்றால் உங்கள் உள்ளம் நிறைந்து உடலும்,உயிரும், வாழ்வும் வளம் பெறட்டும்.
"'மனச்சிக்கல்' இல்லாமல் இரவு உறங்கச் சென்று 'மலச்சிக்கல்' இல்லாமல் காலை எழுந்தால் பல்லாண்டு நலமோடு வாழலாம்" என முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அன்புடன்
 **** ஹரிணி****

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.