பேர்லின் தமிழாலயத்தின் நிர்வாகியின் பணிநிறைவு விழாவும் புதிய நிர்வாகத்தின் அறிமுகமும்!

புலம்பெயர் தேசத்தில் பிறக்கின்ற ஒவ்வொரு தமிழ்க் குழந்தைகளும் அழகுத் தமிழை சரியான முறையில் கற்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்திற்காக எமது தேசியத் தலைமையின் சிந்தனையில் உதிர்த்ததே யேர்மனியில் 130 க்கும் மேலான
தமிழாலயங்களை ஒருங்கிணைக்கும் நடுவமாக விளங்கும் தமிழ்க் கல்விக் கழகம்.
இக் கல்விக் கழகத்தின் தந்தையாக தனது தள்ளாத வயதிலும் இறுதி மூச்சு உள்ளவரை தூய தமிழ் மொழிக்காகவும் , தமிழ் இனத்தின் மேன்மைக்காகவும் பணியை ஆற்றியவர் மாமனிதர் நாகலிங்கம் ஐயா அவர்கள்.
மாமனிதர் நாகலிங்கம் ஐயா தொட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல நூற்றுக் கணக்கான ஆசிரிய மணிகள், நிர்வாகிகள், பெற்றோர்கள், செயற்பாட்டாளர்கள் என பலர் அர்ப்பணிப்பிலும் அயராத உழைப்பிலும் தமிழ் பிள்ளைகள் தமிழை சிறப்பாக இன்றுவரை கற்றுவருகின்றனர்.
அந்தவகையில் யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஒன்றான பேர்லின் தமிழாலயத்தில் கடந்த 5 வருடங்களாக நிர்வாகி பொறுப்பில் தனது அயராத தன்னலமற்ற சேவையை செய்த திரு பெனடிக்ட் இன்பக்குமார் அவர்கள் சென்றவாரம் தனது நிர்வாகிப் பணியை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளார்.
பேர்லின் தமிழாலயத்தின் வரலாற்றில் காலத்தின் தேவை கருதி முக்கிய காலப்பகுதியில் தமிழாலயத்தின் இருப்புக்கும் , வளர்ச்சிக்கும் அதன் நிர்வாக ஒருங்கிணைப்பை பொறுப்பெடுத்து சிறப்பாக மேம்படுத்தியவர் திரு பெனடிக்ட் இன்பக்குமார் அவர்கள்.
இப் பணியை மதிப்பளிக்கும் முகமாக பேர்லின் தமிழாலய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், நகர செயற்பாட்டாளர்கள் , "காலம் வெளிப்படுத்திய பணியாளன்" திரு பெனடிக்ட் இன்பக்குமார் அவர்களுக்கு பணிநிறைவு விழாவை தமிழாலயத்தின் மண்டபத்தில் சிறப்பாக முன்னெடுத்திருந்தனர்.
பணிநிறைவு விழாவில் முதலாவதாக தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிந்து ஈகைச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
இவ் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் ,தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமாநிலப் பொறுப்பாளர் வருகைதந்து சிறப்பித்தனர்.
திரு பெனடிக்ட் இன்பக்குமார் அவர்களின் பணியை மதிப்பளிக்கும் முகமாக மண்டபம் நிறைந்த மக்கள் எழுந்துநின்று கரவொலி எழுப்பி அவரை வரவேற்றத்துடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பேர்லின் வாழ் தமிழின உணர்வாளர்கள்,சிறப்பு விருந்தினர்கள் , யாழ் மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தமது வாழ்த்துரைகளையும் வழங்கினார்கள். தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு லோகானந்தம் செல்லையா அவர்கள் தனது உரையில் , தமிழ்ப் பணியின் வளர்ச்சி என்பது ஒரு அஞ்சலோட்டமாக நாம் ஒருங்கிணைந்து அடுத்த சந்ததிக்கு உரிய முறையில் கையளிக்க வேண்டும், அத்தோடு இத் தொடர் ஓட்டத்தில் வேகமாக அனைவரும் முழு திறமையும் வெளிப்படுத்தி ஓடினால் மட்டுமே தமிழின் வெற்றியை நிலைநாட்ட முடியும் என்பதை வலியுறுத்தினார்.
பேர்லின் தமிழாலயத்தில் உதவி நிர்வாகியாக பணியாற்றிய செல்வி சபீனா உதயகுமார் அவர்களுக்கும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து திரு பெனடிக்ட் இன்பக்குமார் அவர்கள் தனது ஏற்புரையில் தனது தமிழ்ப் பணியை செய்வதற்கு ஆதரவும், ஒத்துழைப்பும் நல்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்ததோடு தனது தமிழ்ப் பணியும் பேர்லின் தமிழாலயத்திற்கான கடமையும் தொடரும் என்பதையும் உறுதியளித்தார்.
இறுதியாக தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு லோகானந்தம் செல்லையா அவர்களினால் பேர்லின் தமிழாலயத்தின் புதிய நிர்வாகம் அறிமுகப்படுத்தப்பட்டது. பேர்லின் தமிழாலயத்தின் புதிய நிர்வாகியாக திரு செந்தில்குமரன் கந்தசாமி அவர்களும், உதவி நிர்வாகியாக செல்வி தாரகா ஜோர்ஸ், பொருளாளராக திரு கஜேந்திரன் தேவராசன் அவர்களும் மற்றும் துறைசார் பொறுப்பாளர்களாக மேலும் இளையோர்கள் தமது பணியை பொறுப்பெடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.