வட சென்னையைக் குறிவைக்கும் மற்றொரு படம்!

கோபி நயினார் இயக்கும் புதிய படம் வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகவுள்ளது.

நயன்தாரா நடித்துக் கடந்த ஆண்டு வெளியான அறம் திரைப்படம் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கிய அந்த படம் விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்றது. இதனால் கோபியின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நயன்தாராவுடன் அறம் 2 திரைப்படம் இயக்குவதாகப் பேச்சு எழுந்தது. பின் ஆர்யாவைக் கதாநாயகனாகக் கொண்டு படம் இயக்குவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்தக் கூட்டணி அமையவில்லை. தற்போது ஜெய் கதாநாயகனாக நடிக்க, புதிய படத்தை இயக்குகிறார் கோபி நயினார். இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் வட சென்னையை கதைக்களமாகக் கொண்டு அங்குள்ள மக்களின் வாழ்வைப் பேசும் படமாக உருவாக உள்ளது. குறிப்பாக வட சென்னையில் பிரபலமான ‘பாக்ஸிங்’ கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் பிரபலமான டேனியல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய பிரசாத் இசையமைக்க உள்ளார்.

வட சென்னையைக் களமாகக் கொண்டு தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிவரும் ‘வட சென்னை’ படம் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கோபி நயினார் இயக்கும் இந்த படமும் அதே பகுதியை மையப்படுத்தி உருவாவதுடன் ஐஸ்வர்யா ராஜேஷே கதாநாயகியாகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.