திருமுருகன் காந்தி: 29 வழக்குகளிலும் ஜாமீன்!


பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு இன்று (அக்டோபர் 2) எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் இன்று மாலை வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஜெர்மனியில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய திருமுருகன் காந்தியை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் மீது ஊபா பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் எழும்பூர் நீதிமன்றம் அவரை ஊபா பிரிவிலிருந்து விடுவித்தது.

எனினும் அவர் மீது 505(1)(b)-(அரசுக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுவது (அ) பொது அமைதிக்கு எதிராகச் செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 16 வழக்குகள் பதியப்பட்டது. கடந்த ஆண்டு 13 வழக்குகள் என மொத்தம் அவர் மீது 29 வழக்குகள் தொடரப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே தனிமைச் சிறை, சுகாதாரமில்லாத உணவு போன்றவற்றால் திருமுருகன் காந்தியின் உடல் நிலை மோசமடைந்தது. குடல்புண், தலைவலி போன்றவற்றால் அவதியுற்ற திருமுருகன் காந்தி கடந்த 29ஆம் தேதி சிறையிலேயே மயக்கமடைந்தார்.. இதையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது

இந்நிலையில், அவரை விடுவிக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன. அவர் மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்குகளிலிருந்து படிப்படியாக ஜாமீன் கிடைத்து வந்த நிலையில், அவருக்கு அனைத்து வழக்குகளிலிருந்தும் எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

திருமுருகன் காந்தியின் ஜாமீன் குறித்து மே 17 இயக்கத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், “திருமுருகன் காந்தி மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளுக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் பிணை பெறப்பட்டு, அந்த ஆணை வேலூர் சிறையில் சிறை அதிகாரிகளிடமும் வழங்கப்பட்டுவிட்டது. அவர் மீது 3 பிடி வாரண்ட்கள் மட்டுமே நிலுவையில் இருக்கின்றன. இனிமேலும் திருமுருகன் காந்தியைச் சிறைத் துறையோ, காவல் துறையோ விடுதலை செய்யாமல் வைத்திருந்தால் அது சட்ட விரோதக் காவலாகும். எனவே திருமுருகன் காந்தி அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை திருமுருகன் காந்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சிறைக்கு வெளியே காத்திருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், அப்பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலைக்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்தார்.

”பாஜக அரசின் உத்தரவுகேற்ப தமிழகஅரசு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் கருத்துரிமை மறுக்கப்பட்டுவருகிறது.தமிழகத்தில் சட்ட விரோதமான ஆட்சி முறை நடந்து வருகிறது. பல்வேறு குற்றங்களை புரிந்த பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கைது செய்யப்படுவதில்லை” என்று திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.