ஆக்கிரமிப்பை அகற்றும் கெடு முடிவு!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்து தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியேறுவதற்கு, விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் (அக்டோபர் 3) நிறைவடைகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், திருமலைச்சமுத்திரத்தில் 1985இல் திறந்தவெளிச் சிறைச்சாலை கட்டுவதற்காகச் சிறைத் துறைக்கு 58.17 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு ஒதுக்கியிருந்தது. இந்த நிலத்தை ஆக்கிரமித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தனது கட்டடங்களைக் கட்டிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகச் சிறைத் துறையானது சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வெளியேற்ற நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி சாஸ்த்ரா பல்கலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கைத் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 2017 ஆகஸ்ட் 11ஆம் தேதி தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பில், "சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்திற்கு ஈடாக ரூ.10 கோடியைப் பெற்றுக்கொண்டு அந்த நிலத்தை அவர்களிடமே ஒப்படைக்கலாம்" என்று நீதிபதி நூட்டி ராமமோகன ராவ் தீர்ப்பு வழங்கினார்.
ஆனால் மற்றொரு நீதிபதியான எஸ்.எம்.சுப்பிரமணியம், "பல கோடி மதிப்புள்ள அரசு சொத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களிடமே திரும்பி ஒப்படைப்பது என்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை 4 வாரங்களுக்குள் அரசு மீட்க வேண்டும், ஆக்கிரமிப்புக்குத் துணைபோன அதிகாரிகள், ஊழியர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.
இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பையடுத்து, இந்த வழக்கின் இறுதி முடிவுக்காக 3ஆவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திடம் இருந்து நிலத்தை மீட்குமாறு தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது. ஆக்கிரமிப்புக்குள்ளான 58.17 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள 28 கட்டடங்களை இன்றுக்குள் (அக்டோபர் 3) இடித்துவிட்டு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. நிலத்தை காலி செய்யாவிட்டால் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் ஆக்கிரமிப்பிலிருந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியேறுவதற்கான கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.