சம்பளப் பிரச்சினையில் ஜெட் ஏர்வேஸ்!

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படாமல் தொடர்ந்து தாமதிக்கப்பட்டு வருவதால் கடும் அதிருப்தியில் ஊழியர்கள் இருக்கின்றனர்.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு விமானப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கிவரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. தொடர்ந்து இயங்குவதற்குத் தேவையான நிதியைத் திரட்டமுடியாமல் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ், தனது ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதிலும் தாமதித்து வருகிறது. 


சென்ற மாதங்களில் விமான ஓட்டிகள் மட்டும் பொறியியல் பணியாளர்களுக்கான ஊதியத்தை வழங்காமல் தாமதித்து வந்த ஜெட் ஏர்வேஸ் இப்போது அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கான சம்பளத்தையும் கிடப்பில் போட்டுள்ளது.


இதுகுறித்து பெயரை வெளியிட விரும்பாத ஜெட் ஏர்வேஸ் ஊழியர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலேயே முந்தைய மாதத்துக்கான சம்பளம் எங்களுக்குக் கிடைத்துவிடும். ஆனால் சென்ற மாதத்தில் மூத்த நிர்வாகிகள், விமான ஓட்டிகள் மற்றும் பொறியியல் பணியாளர்களுக்கு மட்டும் சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த முறை (செப்டம்பர் ஊதியம்) யாருக்குமே இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை” என்று கூறியுள்ளார். 


ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இவ்வாறு சம்பளத்தை வழங்குவதில் தாமதித்து வருவதால் அதன் 16,000க்கும் மேற்பட்ட பணியாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.


முன்னதாக செப்டம்பர் 6ஆம் தேதி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் மூத்த தொழிலாளர்களிடம் அவர்களின் சம்பளத்தை இரண்டு தவணைகளாக நவம்பர் மாதத்துக்குள் வழங்கிவிடுவதாகக் கூறியிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.