கந்துவட்டி: குழந்தையைக் கடத்தியவர் கைது!

கந்து வட்டிக்கு வாங்கிய பணத்தைத் திருப்பித் தரவில்லை எனக் கூறி 2 மாதக் குழந்தையையும், மனைவி மற்றும் பாட்டியையும் கடத்திச் சென்றவர் திருவண்ணாமலையில் இன்று (அக்டோபர் 03) கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் 4ஆவது கோபுரத் தெருவில் வசிக்கும் பாரதி, அதே தெருவில் வசிக்கும் மணிகண்டன் என்பவரிடம் ஓராண்டிற்கு முன்பு 38ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதற்கு மாதா மாதம் வட்டியும் செலுத்தி வந்த நிலையில், நிலுவையில் 80ஆயிரம் ரூபாய் இருப்பதாகக் கூறி பாரதியின் 2மாதக் குழந்தையையும், அவரது மனைவி மற்றும் பாட்டியையும் மணிகண்டன் கடத்திச் சென்றுள்ளார்.

மேலும், பணத்தை செலுத்திவிட்டு 3 பேரையும் அழைத்துக்கொண்டு செல் என்று மணி பாரதியை மிரட்டியுள்ளார். பாரதி கடனை திரும்பிச் செலுத்த தவணை கேட்டு மன்றாடியும் குழந்தையை விடுவிக்காததால் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தை, மனைவி, பாட்டி ஆகியோரை மீட்டு பாரதியிடம் ஒப்படைத்தனர். கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.