வீடு திரும்பினார் விஜயகாந்த்!

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், இன்று மாலை வீடு திரும்பினார்.

வருடந்தோறும் கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்துகொண்டு, அவர்களது உருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால் நேற்று நடைபெற்ற நிகழ்வில் விஜயகாந்த் கலந்துகொள்ளவில்லை. தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவால் விஜயகாந்த் இன்று (அக்டோபர் 3) சென்னை மணப்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது. பரிசோதனை முடிந்த நிலையில், இன்று மாலை விஜயகாந்த் வீடு திரும்பினார்.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவருகிறார். இதற்காக அவ்வப்போது சிகிச்சையும் எடுத்துவருகிறார். கடந்த ஜூன் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த், 45 நாட்கள் அங்குத் தங்கி சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பினார். மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி திடீரென சென்னை மணப்பாக்கத்தில் உள்ள 'மியாட்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
Powered by Blogger.