இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கையுடன் படகுகள் விடுவிப்பு!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய மீன்பிடிப் படகுகள் நான்கு விடுவிக்கப்பட்டுள்ளன.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி இந்தியாவின் இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் இரண்டு மீனவர்களுக்குச் சொந்தமான 4 நாட்டுப்படகுகளை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

இதுகுறித்த வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. படகு உரிமையாளர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த படகுகள் நாட்டுப்படகு வகையை சேர்ந்தவையென குறிப்பிட்ட மீனவர்கள், தவறுதலாகவே எல்லையை தாண்டியாக குறிப்பிட்டனர்.

இவற்றினை ஆராய்ந்த நீதவான் ஏ.யூட்சன், இனிமேல் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடக்கூடாதென எச்சரித்து படகுகளை விடுவித்தார்.
Powered by Blogger.