கருணாஸுக்கு ஆதரவு: நடவடிக்கை எடுக்கப்படும்!

கருணாஸின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், , “தமிழக மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அரசு எதிர்க்கும். வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் ஆளுமை செலுத்துகிறது என்பது தவறு. நீதிமன்றம் மூலம் ஆளுமையை செலுத்த முயற்சிக்கிறது. அதை தடுத்து நிறுத்தும் செயலில் தமிழக அரசு தனது கடமையை செய்துகொண்டு இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

கருணாஸுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, “கருணாஸ் கொள்கைகளுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்த அவர், அமைச்சர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திமுக கூறிவருவதாகவும், இதை உரிய ஆதாரங்களுடன் முறியடிப்போம் என்றும் தெரிவித்தார்.

மேலும், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். மதுரையில் கண்டிப்பாக எய்ம்ஸ் அமையும். எந்த மாற்றமும் இதில் இல்லை.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார். அவர் தனது பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் எதுவும் இல்லை. நக்சலைட் இருப்பதாக பொன் ராதாகிருஷ்ணன் கூறியது தவறானது” என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.