ஈஸ்வரங்களின் ஆலய பிரதேசங்களை புனித பூமியாக பிரகடனப்படுத்த நடவடிக்கை!

இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க ஐந்து ஈஸ்வரங்களின் ஆலய பிரதேசங்களை புனித பூமியாக பிரகடனப்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு சபைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்விடயம் தொடர்பாக பிரேரணை ஒன்றினை முன்வைத்தார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டிலுள்ள திருகோணமலை, சிலாபம் முன்னேஸ்வரம், திருகோணேஸ்வரம், மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம், யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆகிய ஆலய பிரதேசங்களை புனித பூமிகளாக பிரகடனப்படுத்த வேண்டியது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான விடயமாகும்.

அந்தவகையில், அண்மையில் மன்னார் மடு மாதா ஆலய பிரதேசம் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கு அரசாங்கத்துக்கு வடக்கு மாகாண சபை நன்றி தெரிவித்துக்கொள்கின்றது.

அதேபோன்று திருகோணமலை, சேரூவில் பௌத்த ஆலய பிரதேசமும் புனித பூமியாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 50 ஆண்டுகளாக திருகோணமலை மற்றும் திருகோணேஸ்வரம் ஆகிய ஆலய பிரதேசங்களை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு வலியுறுத்தி வருகின்றோம்.

இருப்பினும் அரசாங்கம் இவ்விடயத்தில் தொடர்ச்சியாக புறக்கணித்து வருகின்றது. ஆகையால் குறித்த இந்துக்களின் 5 ஆலயங்களின் பிரதேசங்களையும் புனித பூமியாக பிரகனப்படுத்த அரசிடம் கோரிகை முன்வைக்க வேண்டும்” என பிரேரணையில் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த பிரேரணை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.