சிறப்புக் கட்டுரை#MeeToo அர்த்தம் இருக்கிறதா?

வினிதா

#MeeToo இயக்கம் பற்றிப் பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்?
#MeeTooஎன்ற இயக்கம் சமீபத்தில் தொடங்கியதாக இருக்கலாம். ஆனால், இந்தப் பிரச்சினை இந்தியாவுக்குப் புதிதல்ல. இப்போது சமூக வலைதளத்தில்
ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் பரவலான மக்களைச் சென்றடைந்திருக்கிறதா? பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் இணைந்துகொள்ளும் அளவுக்கு இது பரவலாகியிருக்கிறதா? தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை அனைவராலும் தைரியமாகப் பகிர்ந்துகொள்ள முடிகிறதா?
இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளோடு சாமானிய மக்களில் சிலரைச் சந்தித்தோம். அதில் கிடைத்த பதில்கள் நம் சமூக யதார்த்தங்களைப் புரியவைக்கின்றன.
#MeeToo என்றால் “நானும் அப்படித்தான்” என்ற அர்த்தம்தானே என்கிறார் சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை அமுதா. இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்ட பின்னர்தான், இப்படியொரு இயக்கம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறதை அவரால் உணர முடிந்தது. “எனக்கு 10 வருஷங்களுக்கு முன்னாடி பாலியல் தொல்லை நடந்தது. அப்போது சொல்ல பிடிக்கவில்லை. ஆனால், எப்போது சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேனோ அப்போதுதான் சொல்ல முடியும் என்று கூறுவது தவறு. ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த வேளையில் அதை ஏற்றுக்கொண்டு கடந்து போயிருக்கும்போது, இப்போது ஏன் அதை வெளிக்கொணர வேண்டும்” என்று தன்னுடைய புரிதலைக் கூறினார் அமுதா.
“பாலியல் தொல்லைகளைச் சகித்துக்கொண்டுதான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டுமென்றால்,அப்படிப்பட்ட ஒரு வேலையே வேண்டாமே” என்று உறுதியாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேஃப்ரிகேஷன் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் செல்வி.
#MeeToo பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அதென்னவென்று நீங்கள் சொல்லித்தான் தெரியும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி லெட்சுமி. சம்பவம் நடந்தபோதே சொல்லியிருந்தால், அதற்குத் தீர்வு கிடைத்திருக்கும். மற்றவர்களும் அந்த நபரிடம் எச்சரிக்கையாக இருந்திருக்கவும் உதவும் என்று சொல்லும் லெட்சுமி, “இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்களையே குறை சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தப் பெண் இருக்கிறார் என்று சொல்ல முடியாது. நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என ஒருவர் கூறும்போது, ஏதோ ஒரு துணை கிடைத்ததுபோன்று அனைவரும் சொல்ல ஆரம்பிக்கின்றனர். அனைவரும் சொல்லும்போது ஒரு நபரை மட்டும் இந்தச் சமூகம் தவறான எண்ணத்தோடு பார்க்காது என்பதற்காகக்கூட தற்போது கூறலாம்” என்று கூறினார்.
“ஒரு நபரிடமிருந்து வேலையோ, உதவியோ தேவைப்படும்போது அவரை விடாமல் பிடித்துக்கொள்கிறோம். அந்தத் தேவை பூர்த்தியானவுடன் அவர் என்னை இப்படி செஞ்சாருனு சொல்றது நல்லாவா இருக்கு?” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு வரை படித்த இல்லத்தரசி வள்ளி.
“ஆரம்பத்திலேயே இவர் அப்படிதானு தெரிஞ்சா ஒதுங்க வேண்டியதுதானே. தன்னுடைய தேவை நிறைவேறும் வரை அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைப்பது நல்லதல்ல. இதெல்லாம் நான் ஏத்துக்கிட மாட்டேன்” என்கிறார் வள்ளி.
“அவங்கள மாதிரி நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இவங்கள மாதிரி நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என மற்றவர்களை முன்னிறுத்தி தனக்கு ஏற்பட்ட ஒன்றைச் சொல்வது அவ்வளவு சரியாக தெரியவில்லை” என்கிறார் மணலியைச் சேர்ந்த பட்டதாரி ஆஷா.
“சம்பவம் நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சொல்வதன் மூலம் என்ன பிரயோஜனம்? அப்போது எப்படி அமைதியாக இருந்தார்களோ, அதுபோன்று இப்போதும் அமைதியாக இருப்பதுதான் நல்லது என்று நான் நினைக்கிறேன். மீ டூ என்ற இயக்கம் சமூக வலைதளங்களில் டிரெண்ட்டுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. பெரும்பாலானவர்கள் வைரலாக வேண்டுமென்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கின்றனர்” என்று சொல்லும் ஆஷா, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை நிரந்தரமாக ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று முடிக்கிறார்.
“ஒரு பெண்ணே பெண்ணுக்கு ஆதரவு தராமல் இப்படி பேசுறாங்க என்று பார்க்க வேண்டாம். பெண்களுக்கு எதிராக நடக்கிற பாலியல் குற்றங்களைப் பார்க்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எதிர்த்துப் போராடாமல், அல்லது அந்தச் சூழ்நிலையை விட்டு விலகாமல் இருந்துவிட்டு இப்போது குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்கிறார் அமுதா.
“இப்போதுள்ள பெண்கள் வெட்கப்படாமல் எனக்கு இப்படி நடந்ததுனு கூச்சப்படாம சொல்றாங்க, இதுபோன்று எனக்கு நடந்திருந்தா வெளியில சொல்றதுக்குப் பதிலா ஒரேடியா தூக்கில தொங்கியிருப்பேன்” எனப் பதற்றத்துடன் கூறினார் செல்வி.
#MeeToo என்கிற கருவி
#MeeTooஎன்ற இயக்கம் பெரும் பரபரப்பையும் சலனங்களையும் ஏற்படுத்தினாலும், இன்னமும் இது குறித்த விழிப்புணர்வும் புரிதலும் சமூகத்தில், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் போதிய அளவு இல்லை என்பதையே இந்த எதிர்வினைகள் காட்டுகின்றன. அப்போதே ஏன் சொல்லவில்லை, அப்போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது சொல்வதில் என்ன நியாயம் என்னும் கேள்விகளையே இவர்களும் முன்வைக்கிறார்கள். இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்கள் அறிவார்ந்த தளத்தில் பலராலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன எனினும், இது குறித்த கேள்விகளுக்கான பதில்கள் பெண்களிடம் உரிய முறையில் பரவலாய்ப் போய்ச் சேரவில்லை என்பதை உணர முடிகிறது.
இந்தப் பின்னணியில் ஜெயின் கல்லூரி பேராசிரியை ஷீபாவின் கூற்று பொதுமக்களிடையே எழும் மாற்றுக் குரலாக ஒலிக்கிறது. “பாதிக்கப்பட்ட பெண்களின் வலியை உணர்வதன் மூலமாக அவர்களுக்குச் சக்தியை அளிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு மீ டூ ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. காலம் செல்லச் செல்ல மீ டூ, வீ டூ ஆக மாறியது. பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளிக்கொணர வேண்டும். இதுபோன்ற இயக்கங்கள் ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை விடும் கருவியாக இருக்க வேண்டும். பெண்கள் செக்ஸ் பொம்மை அல்லது சுகத்தை அளிப்பவர்கள் மட்டும் என்று ஆண்கள் நினைக்கக் கூடாது” என்கிறார் பேராசிரியை ஷீபா.
“ஆண்கள் பெண்களை வலிமையற்றவர்களாக (weaker sex) நினைக்கிறார்கள். உடலளவில் பலவீனமானவர்கள் மட்டுமில்லாமல், தங்களுக்கு இழைக்கப்படுகிற துன்பங்களையும் வெளியில் சொல்லத் தெரியாத ஜீவன்களாக நினைக்கிறார்கள் ஆண்கள். இதுபற்றி வெளிப்படையாகச் சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இந்தச் சமூகம் இல்லை. அப்படி வெளியே சொல்லிவிட்டாலும், அதற்கடுத்து அந்த பெண்ணைப் பார்க்கிற ஒவ்வொரு பெண் மற்றும் ஆணின் எண்ணங்கள் முன்புபோல் இருப்பதில்லை. உண்மையிலேயே இதுபோன்ற சம்பவங்களை வெளியில் கூறுவதற்கு தைரியம் தேவை. இந்த தைரியத்தைத் தருவதுதான் மீ டூ என்கிற இயக்கத்தின் பலன்” என்று கூறும் ஷீபா, தவறு செய்யாதவர்களைக் காயப்படுத்தவோ அல்லது தண்டிக்கவோ இது ஒரு கருவியாக மாறிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்.
மீ டூ இயக்கத்தின் நோக்கம், பலன்கள் குறித்துப் பேராசிரியை ஷீபாவுக்கு இருக்கும் தெளிவு இதர பெண்களுக்கும் ஏற்படவில்லை என்பதே யதார்த்தம். இந்த இயக்கத்தைப் பரபரப்பான செய்தியாக ஆக்கும் ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டால் இந்த இடைவெளியைக் குறைக்கலாம்.

No comments

Powered by Blogger.